மேலும்

திங்களன்று கொழும்பு செல்கிறார் அஜித் டோவல் – மைத்திரியையும் சந்திக்கிறார்

AJIT-KUMAR-DOVALசிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி, தி ஹிந்து நாளிதழ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,

“காலியில் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ‘காலி கலந்துரையாடல்’ என்ற கடல் பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அஜித் டோவல் சந்திப்பார் என்பதை, அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடனான சந்திப்பின் போது, அஜித் டோவல், சிறிலங்கா மற்றும் மாலைதீவின் கடல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் சீனாவின் பங்கு அதிகரித்து வருவது குறித்தும் கூட  எழுப்பப்படலாம்.

ஒரு மாதத்துக்கு முன்னதாக, புதுடெல்லியில் சிறிலங்கா அதிபரின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்த போது, சீனாவின் இராணுவத் தலையீடுகள் சிறிலங்காவில் அதிகரிப்பது குறித்த இந்தியாவின் கவலையை அஜித் டோவல் வெளிப்படுத்தியிருந்தார்.

டோவல் தனது பயணத்தின் போது, எதிரணியின் போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவையும்,  அவருக்கு பின்புல ஆதரவை வழங்கும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும் சந்திப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் டோவல் சந்திப்பார்” என்றும், கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *