மேலும்

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

president-election-2015சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை அடுத்தவாரம் புதுடெல்லிக்கு வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தமக்கு இன்னமும் இப்படியான அழைப்பு ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வடக்கில் 7 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், வாக்களிப்பதற்கு வடக்கு மாகாணத்தில், சுமார் 7 இலட்சத்து 20 ஆயிரம்  வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி, வடக்கு மாகாணத்தில், மொத்தம் 719,477வாக்களர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 426,813 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில், 68,600 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில், 75,737 வாக்காளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில்,53,686 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 94,644 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மைத்திரியின் முதல் பரப்புரைப் பேரணி

எதிரணியின் பொதுவேட்பாளராக வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் முதல் தேர்தல் பரப்புரைப் பேரணி நாளை பொலன்னறுவவில் இடம்பெறவுள்ளது.

ஜெயசிறி மைத்திரி என்ற முழக்கத்துடன் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணியில், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.

இந்தப் பேரணியை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் முதலாம் நாள், எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும்.

இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டு, ஒரு வார காலத்தில், மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதாதைகள், பொலித்தீன் இல்லாத பரப்புரை

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத வகையில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது தேர்தல் பரப்புரைகளில் பொலித்தீன் மற்றும் பதாதைகள் (கட்அவுட்) பயன்படுத்தப்படமாட்டாது என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதேவேளை, வேட்புமனுச்சமர்ப்பிக்கும் நாளான, டிசம்பர் 8ம் நாளுக்குப் பின்னர், சுவரொட்டிகள் ஒட்டப்படுவது பதாதைகள் வைக்கப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையாளரும் காவல்துறை மா அதிபரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *