மேலும்

‘சிறிலங்கா அதிபர் அவர்களே உங்கள் பற்றிய கோப்புகள் எம்மிடமும் உள்ளன’

இந்த நாட்டில் நடந்த உண்மைகளைப் பொய்கள் மறைத்திருக்கலாம். ஆனால் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது. சிறிலங்காவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டின் அழிவுக்கும் பொதுச் சொத்துக்களை ஊறுவிளைவித்தமைக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Counterpunch ஊடகத்தில் Sri Lanka Guardian என்னும் இணையத்தள ஊடகத்தின் ஆசிரியரான *Nilantha Ilangamuwa எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அன்பிற்குரிய திரு.அதிபர் அவர்கட்கு, அமெரிக்காவில் நிலவிய அநீதி முறைமைக்கு எதிராகக் குரல் கொடுத்த அந்நாட்டைச் சேர்ந்த விலைமதிக்க முடியாத ஒருவரான எட்வேர்ட் அபே கூறியது போன்று, தனிப்பட்ட ஒருவரின் நலனை நோக்காகக் கொண்டு நாட்டை வளர்ச்சியுறச் செய்வதானது புற்றுநோய் போன்று எல்லாவற்றையும் அழித்துவிடும் என்கின்ற கருத்தியலின் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் ஒரு தேசமானது நீண்ட காலம் நிலைத்திருக்காது.

நீங்கள் உட்பட பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்துவவாதிகள் இந்த நாட்டைத் தீக்கோழிகளைக் கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்பதும் தங்களின் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் அநீதிகளுக்கு முகங்கொடுக்கும் போது தமது தலைகளை நிலத்திற்குள் புதைக்க முற்படுகின்றமையும் உண்மையே.

ஆனால் தற்போது காலம் மாறிவருகிறது. தற்போது சிறிலங்காவானது சாதகமான மாற்றங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மீண்டும் ஒரு தடவை, சிறிலங்காவின் அரசியல் சித்தாந்தங்களில் வன்முறையற்ற கோட்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்படுகின்றன.

வன்முறை சாரா அரசியல் நெறிமுறைகளை முதன்மைப்படுத்தி சிறிலங்காவின் எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரும் ஆளுங்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான மைத்திரிபால சிறிசேனவின் உரையானது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், இந்தப் பயணம் இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது. இதனை அடைவதற்கு இன்னமும் நீண்ட தூரம் உள்ளது. உண்மையான சவால்கள், தடைகள், சுமைகள் மற்றும் தோல்விகள் போன்றவற்றைச் சந்திக்கவேண்டி ஏற்படும்.

இந்த நாட்டின் ஒழுக்க விழுமியத்தை சீர்குலைத்த கொடுங்கோலனை முற்றாக அழிப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதுவே தற்போது கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றன.

தனது கட்சியிலிருந்து வெளியேறியுள்ள மற்றும் வரும் நாட்களில் தனது கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் கூட்டுச்சேரத் திட்டமிடுபவர்களுடன் அதிபர் ராஜபக்ச வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

தனக்கு ஆதரவாகச் செயற்படும் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கோப்புக்கள் தன்னிடமுள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறுகிறார். இவர்களுக்கு சிறிலங்கா அதிபரின் உதவி தேவைப்படுவதாலேயே இவர்கள் தொடர்ந்தும் சிறிலங்கா அதிபரின் காலை வலம் வருகிறார்கள் என்பது உண்மையாகும். குறிப்பாக இந்த அரசியல்வாதிகளால் இழைக்கப்பட்ட தவறுகளை சிறிலங்கா அதிபர் நன்கறிவார். இதுவரை காலமும் இவர்களை சிறிலங்கா அதிபரே காப்பாற்றி வருகிறார்.

இந்த நாட்டில் நடந்த உண்மைகளைப் பொய்கள் மறைத்திருக்கலாம். ஆனால் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது. சிறிலங்காவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டின் அழிவுக்கும் பொதுச் சொத்துக்களை ஊறுவிளைவித்தமைக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

எதுஎவ்வாறிருப்பினும், இந்த அரசியல்வாதிகள் எவ்வாறான மீறல்களைப் புரிந்துள்ளனர் என்பதும் இவர்களது கோப்புக்களில் என்ன உள்ளன என்பதும் எவருக்கும் தெரியாது. ஆனால் அரசியல் என்கின்ற பெயரில் இவர்களால் செய்யப்பட்ட மீறல்கள் மற்றும் தவறுகள் நாட்டின் உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் கண்ணியத்திற்கு அழிவை உண்டுபண்ணியுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

“கட்சிக்குத் துரோகம் இழைத்து, கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவியவர்களுக்கு எதிராக அவர்கள் தொடர்பாக என்னிடமுள்ள கோப்புக்களைப் பயன்படுத்தமாட்டேன். ஆனால் கண்ணாடி வீடுகளுக்குள் இருந்தவாறு கற்களை வீசவேண்டாம் என அவர்களை நான் எச்சரிக்கிறேன்” என சிறிலங்கா அதிபர் ‘கண்ணியமாகத்’ தெரிவித்துள்ளார். இதன்மூலம் இவர் தனது அரசியல் தந்திரோபாயத்தை பொதுக் கூட்டம் ஒன்றில் நாசுக்காக வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இத்தகைய எச்சரிக்கையானது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான கடும்போக்கான நிலைப்பாட்டையும், இவர் முன்னர் கொண்டிருந்த அரசியல் அதிகாரத்தை இழந்து வருகிறார் என்பதையும் பிரதிபலித்ததே தவிர வேறொன்றுமல்ல.

மற்றையவர்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் கொண்டுள்ள கோப்புக்கள் தொடர்பான கருத்தியலானது இரண்டு வெவ்வேறு முகங்களைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, கடந்த பத்தாண்டில் சிறிலங்கா அதிபர் பின்பற்றிய தலைமைத்துவ ஒழுக்கநெறி. இரண்டாவது, இவரது அரசியல் நடத்தை மற்றும் இவரும் இவரது சகபாடிகளும் ஆட்சியை சீர்குலைத்தமை.

சிறிலங்கா அரசாங்கமும் அரச திணைக்களங்களும் சுயாதீன அதிகாரத்தைக் கொண்டிருந்தால், சிறிலங்கா அதிபர் நிச்சயமாகத் தன்னிடமுள்ள கோப்புக்களை சட்டமா அதிபரிடம் கையளிக்க வேண்டும். இதன்பின்னர் சட்டமா அதிபர் இந்தக் கோப்புக்களை ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால் சிறிலங்கா அதிபர் இத்தகைய நடவடிக்கையை எடுக்க முன்வராதது ஏன்?

அதிபரால் இதனைச் செய்ய முடியவில்லை என்பதால் இந்தக் கோப்புக்களை இன்னமும் கையளிக்காமல் வைத்திருக்கிறார் எனக் கருதக்கூடாது. இவரால் முடியும். ஆனால் இவர் தன்னைத் தானே பாதுகாப்பதற்காகவே இவற்றைக் கையளிக்காது தன்னிடம் வைத்துள்ளார். இவரது அரசியலானது சுய அழிவுக்கான ஒட்டுண்ணியாக மாறிவிட்டது.

மற்றைய அரசியல்வாதிகளின் தவறுகளை உள்ளடக்கிய கோப்புக்களைத் தான் கொண்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறுவதானது நாட்டின் மீது திட்டமிட்ட முறையில் அழிவை ஏற்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையே அன்றி வேறொன்றுமல்ல. இது நாட்டின் ஒருமைப்பாட்டின் அடிப்படை விழுமியங்களை இழிந்த முறையில் கையாள்வதையே சுட்டிக்காட்டுகிறது.

சிறிலங்கா அரசியல் யாப்பின் 18வது திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையை தவறாகப் பயன்படுத்துவதையே சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகள் மேலும் சுட்டிநிற்கின்றன. தன்னைத் தானே பாதுகாப்பதற்காக திருடர்களைப் பாதுகாக்கும் தலைவர் ஒருவர் எமக்கு ஏன் தேவை?

இது நாட்டின் ஒழுக்கநெறி மற்றும் விழுமியத்தை மேலும் சீர்குலைக்கிறது. சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, சிறிலங்கா அதிபர் தன்னிடமுள்ள கோப்புக்களை நிறைவேற்று அதிகார முறைமையையும் தன்னையும் பாதுகாப்பதற்காகத் திருடர்களை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்துகிறார். ராஜபக்சவின் அதிகாரம் மேலும் உயர்வடைந்தமைக்கு இதுவே காரணமாகும். இது ‘மகிந்த சிந்தனையின்’ உண்மையான நீலிசமாகும்.

எதுஎவ்வாறிருப்பினும், தனது காலை நக்குகின்ற திருடர்களை அச்சுறுத்துவதற்காகத் தன்னிடமுள்ள கோப்புக்களைப் பயன்படுத்துகிறார். “நீங்கள் கட்சியை விட்டு வெளியேறினால், நான் உங்கள் தொடர்பான இரகசியங்களை வெளிப்படுத்துவேன்” என அச்சுறுத்துவதே சிறிலங்கா அதிபரின் அடிப்படை மகுடவாசகமாகும். மகிந்த ராஜபக்சவிடம் உள்ள கோப்புக்கள் உட்பட அனைத்துக் கோப்புக்களையும் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுவே தற்போதுள்ள முக்கிய சவாலாகும்.

ராஜபக்ச மட்டும் கோப்புக்களை வைத்திருக்கவில்லை. இவரைப் போல பல அரசியல்வாதிகள் கோப்புக்களை வைத்துள்ளனர். இந்தத் தேசத்திற்குத் துரோகமிழைத்தவர்களின் கோப்புக்களைப் பொதுமக்கள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் யாருக்கு எத்தகைய தண்டனை பொருந்தும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இது மட்டுமே தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான விடயமாகும்.

*Nilantha Ilangamuwa is Editor of Torture: Asian and Global Perspectives. He also edits the Sri Lanka Guardian, an online daily newspaper. He is the author of the recently released non-fiction books, “Nagna Balaya” (The Naked Power), published in Sinhalese, and “The Conflation”, published in English.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *