மேலும்

சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- ரஷ்யா கைச்சாத்து

சிறிலங்காவும் ரஷ்யாவும் இருதரப்பு சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நபர்களை மீண்டும் சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த உடன்பாடு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​சிறிலங்கா சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவது மற்றும் சட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சிறிலங்காவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நபர்களைக் கண்டறிந்து மீண்டும் சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கும், அங்கு அவர்கள் மறைத்து வைத்துள்ள நிதிச் சொத்துக்கள் மற்றும் உடமைகளைக் கண்டறிவதற்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று குட்சன் உறுதியளித்தார்.

சிறிலங்காவின் ‘குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம்’ ஆகியவற்றின் விதிகளுக்கு உட்பட்டே இந்த உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நீதித்துறை சார்ந்த விவகாரங்கள் மற்றும் இரு தரப்புக்கும் ஆர்வமுள்ள பிற துறைகளில் சிறிலங்கா வழங்கி வரும் ஒத்துழைப்பை ரஷ்ய சட்டமா அதிபர் பாராட்டினார்.

இந்தச் சந்திப்பில் ரஷ்ய  உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *