ஆனந்தபுரச் சமர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கை.
2009 இல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் முடிவுப் பகுதியானது அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பல பத்தாண்டுகால போரில் மிகவும் மோசமான காலப் பகுதியாகப் பரவலாக அறியப்படுகின்றது.
இந்தக் காலப் பகுதியே ஐக்கிய நாடுகள் மற்றும் சிறிலங்கா தவிர்ந்த பல நாடுகளிலும் உள்ள சட்டவாளர்களின் பல ஆண்டுகால விசாரணைக்குரிய விடயமாக உள்ளது.
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக மறுப்பு இருந்து வருகின்றது.
இன்றுவரை அந்த இறுதி ஐந்து மாதங்களிலும் எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள் என எவருக்குமே தெரியாது. அத்துடன் பல ஆண்டுகள் கடந்த பின்னரும் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவும் இல்லை.
அத்துடன் புரியப்பட்ட கொடூரங்களுக்கு அவர்களின் வகிபாகத்திற்காக எவருக்கும் தண்டனை வழங்கப்படவும் இல்லை.
2009 ஏப்பிரலில் இரண்டு ஆயுதப்படையினருக்கும் இடையில் இறுதிப் பாரிய சமர் ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.
ஆய்வுக்குரிய ஒரு விடயமான ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், ITJP உட்பட அனைவராலுமே இன்றுவரை புறக்கணிக்கப்பட்டிருந்தது.
ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களை விட பொதுமக்கள், உணவு வரிசைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இதனைவிட, நடந்த சம்பவங்கள் பற்றி சாட்சி கூறுவதற்கு ஆனந்தபுரம் சமரில் மிகச் சிறிய எண்ணிக்கையான விடுதலைப் புலிகள் போராளிகளே உயிர் தப்பியிருந்ததாக நம்பப்பட்டது.
இருப்பினும், கடந்த 17 ஆண்டு காலப்பகுதியில், உயிர்தப்பியவர்கள் வெளிநாடுகளில் மெதுமெதுவாக தலைகாட்டத் தொடங்கினார்கள்.
சிறிலங்காவிலும் உயிர்தப்பியவர்கள் உள்ளார்கள்.ஆனால் அங்குள்ள அரசியற் சூழலானது உறுதியான போராளிகளாக தமது பணி என்ன என்பதை வெளிப்படையாக கூற விரும்புவதை சாத்தியமற்றதாக்குகின்றது.
வெளிநாட்டில் கூட இந்த அறிக்கைக்காக செவ்வி காணப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் தமது அடையாளத்தினை மற்றையவர்களுக்கு வெளிப்படுத்த விருப்பமில்லாமல் இருந்தார்கள்.
அத்துடன், இரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலே கதைத்தார்கள். ஒருவருமே உயிர்தப்பியிருக்க முடியாது என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிய ஒரு சமர் பற்றிய நம்பமுடியாத தகவல்களைக் கேட்ட பின்னர், இந்தக் கதைகள் சிறிலங்காப் போர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி என்பதையும் இது ஆவணப்படுத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
இந்த அறிக்கையில் இரண்டு பகுதிகள் உள்ளன:
பகுதி 01- உயிர்தப்பியவர்களின் கiதைகளை மற்றைய சம்பவங்களுடன் இணைத்துக் கூறும் ஒரு விபரணமாகும்.
பகுதி 02 -ஆனந்தபுரம் சமரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் பற்றிய ஒரு சட்ட ரீதியான ஆய்வு ஆகும்.
பகுதி ஒன்று
சூழல்
2008 செப்ரெம்பரில் சிறிலங்கா அரசானது எஞ்சியிருந்த அனைத்துலக உதவிப் பணியாளர்களையும் விடுதலைப் புலிகள் இன் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்தினை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
போர் விரிவடைந்து கொண்டிருந்ததையும் அதனை வெளியாட்கள் பார்க்கக் கூடாது என்பதனை அடையாளப்படுத்துவதாகவே அது இருந்தது.
அடுத்து வந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம், ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் மீண்டும் இடம்பெயரச் செய்யப்பட்டு, கிழக்கு கடற்கரையோரத்திலுள்ள ஒரு சிறிய ஒடுங்கிய மணற் பிரதேசத்தைக் கொண்ட ஒரு சிறிய மண்முனையில் முடக்கப்படும் வரை, எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
வெடிபொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு தடவையும் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்ட வேளையில், கனரக ஆட்டிலறிகளை விட்டுச் செல்ல வேண்டியிருந்தமையால், விடுதலைப் புலிகள் சரியான முறையில் வலிந்து தாக்குதல்களை நடாத்த முடியாமல், தனது இராணுவப் படையுடன் பின்வாங்கிச் சென்று கொண்டிருந்தது.
2009 ஏப்ரல் முற்பகுதியில் ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரானது சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் பாரிய சமராக இருந்தது.
அதில் விடுதலைப் புலிகள் அமைப்பு அதனுடைய பல மூத்த இராணுவத் தலைவர்களையும் போர் அனுபவம் வாய்ந்த போராளிகளையும் இழந்ததன் பின்னர், வலுவான இராணுவ சக்தி என்ற நிலையை இழந்து விட்டது, அத்துடன் கிட்டத்தட்ட போர் வெல்லப்பட்டு விட்டதாகவே கூறலாம்.
இருப்பினும் அடுத்த ஆறு வாரங்களாக கூடுதலாகப் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்கள் தொடர்ந்து இடம்பெற்றது. இந்தப் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகள் போராளிகளின் குடும்பங்கள் ஆகும்.
2009 ஏப்ரல் 5ஆம் நாள் விடிகாலைக்கு சற்றுமுன்னர் முடிவுக்கு வந்த ஆனந்தபுரச் சமரானது சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகளின் இறுதிப் போராக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வார காலமாக ஏற்கனவே கடுமையான காயங்களுக்கு உள்ளான பலர் உட்பட 800 வரையான விடுதலைப் புலிகள் போராளிகள், சில சதுர கிலோ மீற்றர்களுக்கும் சற்றுக் கூடுதலான ஒரு நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டார்கள்.
இராணுவத்தால் பெட்டியிடப்பட்ட அவர்கள் வெடிபொருட்கள், மருத்துவப் பொருட்கள்,உணவு மற்றும் நீர் உட்பட அனைத்து வழங்கல்களிலிருந்தும் இறுதியில் துண்டிக்கப்பட்டிருந்தார்கள்.
வானில் இருந்து கிபிர் குண்டுத் தாக்குதல் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களின் உதவியினால் மேலோங்கியிருந்த எதிர்த்தரப்பின் கூட்டு வலுவினை எதிர்த்து போரிடுவதற்கு இன்னமும் போரிடக்கூடிய நிலையில் இருந்தவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிடத்தக்க வகையில் சமச்சீரற்ற இந்தப் போட்டியில், ஆனந்தபுரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதமான விடுதலைப் புலிகள் போராளிகள் இறந்தார்கள்.
சிலர் தப்பிச் செல்வதற்கான தீவிரமான இறுதி முயற்சிகளை மேற்கொண்டார்கள். உண்மையிலே மிகக் குறைவானவர்கள் மாத்திரமே தப்பி வெளியே வந்தார்கள்.
இந்த நடவடிக்கையின் போது அவர்களில் பலர் கடுமையாக காயமடைந்தார்கள். ஆறு வாரங்களுக்குப் பின்னர் போர் அதன் தீவிரமான மற்றும் கசப்பான முடிவை அடைந்த போது இவர்களில் இன்னும் சிலர் இரண்டாவது தடவையாகவும் உயிர் தப்பினார்கள்.
ஆனந்தபுரத்தில் உயிர் தப்பிய இந்த சிறிய எண்ணிக்கையானவர்களில் ஏழு பிரதான சாட்சிகளின் வாக்குமூலங்கள் கீழே உள்ளன.
முக்கியமான இந்த இறுதிச் சமரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த விபரணங்களில் இதுவரை சொல்லப்படாதவை பற்றியும், தாம் அனுபவித்தவை பற்றியும் அவர்கள் விபரிக்கின்றார்கள்.
2009 முற்பகுதி: விடுதலைப் புலிகள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்படல்
உள்நாட்டுப் போரில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், 2009 ஜனவரி 02இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி சிறிலங்கா இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தது.
அன்றைய நிலைமை அறிக்கையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இது எதிரியின்‘அழிவுக்கான ஆரம்பம்’ என பெருமிதத்துடன் தெரிவித்தது.
சுமார் 20 கிலோ மீற்றர் கிழக்கே விசுவமடுவில் விடுதலைப் புலிகளின் சண்டைக்கான முக்கிய நரம்பு மையம் இருந்தது. பொதுமக்களின் குடியிருப்பு பகுதியால் சூழப்பட்டிருந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் இராணுவ முகாம்கள், பயிற்சி முகாம்கள், வெடிபொருட் களஞ்சியங்கள் மற்றும் விநியோக நிலையங்கள் என்பன இருந்தன.
சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து முன்னேறியதுடன், ஜனவரி மாத முடிவுப் பகுதியில் விசுவமடுவும் வீழ்ச்சியடைந்தது.
விடுதலைப் புலிகளின் ஆயுத இருப்பினை நிர்வகிப்பதில் தொடர்புபட்டிருந்த சாட்சி ஒன்று (W1), விசுவமடுவில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கிய வேகமும், சேறும் சகதியுமாக பழுதடைந்த வீதிகள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் இருந்தமை உட்பட பாதகமான சூழ்நிலைகளும் ஒன்று சேர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி ஆயுதங்களை கைவிட வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாகவும், அவற்றைப் போராளிகள் வேகமாகப் புதைத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
இது விடுதலைப் புலிகளின் படைகளை மிக மிக குறைந்த எறிகணைகள், மற்றும் ‘சிறியளவிலான துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் ஆகியவற்றுடன் மட்டுமே நகர்ந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.
இதிலிருந்து, முன்னர் 30 பக்கங்களை கொண்ட விடுதலைப் புலிகளின் ஆயுத இருப்புக்கான அதன் பிரதான பட்டியல்கள் வெறும் 5 பக்கங்களாகக் குறைவடைந்தது:
பெப்ரவரி நடுப்பகுதி கணக்கு அறிக்கையில் 100 எறிகணைகள் இருந்ததாகவும் வெடிமருந்துகள் எவையும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளிடம் போதியளவு சண்டை அனுபவம் உள்ள போராளிகள் இருக்கவில்லை.
உயிர் தப்பியவர்களில் ஒருவர் தான் சாட்சி இரண்டு (W2). இவர் விசுவமடுவினைப் பாதுகாக்கும் முயற்சியில் பங்கெடுத்திருந்தார், அவரது படைப்பிரிவு சுமார் 1000 வரையான போராளிகளை இழந்திருந்தது: இவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது கணிசமான அளவிற்கு ஊனமடைந்தார்கள், சிலர் ‘மனநிலைத் தாக்கத்தினால்’ செயலிழந்து போயிருந்தார்கள்.
‘நாய்கள் இறந்த உடல்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கவும்’ வீதியில் பல இறந்த உடல்களைக் கடந்தும் அரசாங்கப் படைகளின் பலத்த எறிகணைத் தாக்குதலுக்கு மத்தியில் விசுவமடுவில் இருந்து பின்வாங்கிய பயங்கரத்தைப் பற்றி அவர் பதிவு செய்கிறார்.
விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கை மையத்தினை ஏ35 நெடுஞ்சாலையில் 15 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, குறிப்பாக ஆனந்தபுரத்திற்கு இடமாற்றியிருந்தார்கள்.
இந்தப் பகுதி புதுக்குடியிருப்பு சந்திக்கு கிழக்கே பனைமரக் கூடல்கள் மற்றும் தென்னந் தோப்புகளுக்கிடையே சிறிய அளவிலான வீடுகளையும் கட்டிடங்களையும் கொண்டிருந்தது.
”போரை வெல்வதற்கான அல்லது போரில் தோற்பதற்கான இறுதி இடமாக ஆனந்தபுரம் இருக்க வேண்டும்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முடிவு செய்தார்.
குறிப்பாக ஆனந்தபுரம் அடர்த்தியான மரக்கூடாரங்களைக் கொண்டிருந்தமையாலும், அது அரசாங்கப் படைகளுக்கு எதிராக எந்தவொரு பதில் தாக்குதலையும் அங்கிருந்து மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகளின் கையில் எஞ்சியிருந்த ஒரு பொருத்தமான இடமாக இருந்தது.
தெளிவாகச்சொல்லப்போனால், தோல்வி தவிர்க்க முடியாதது என நம்பிய சாட்சி 1 இன் கூற்றுப்படி, ‘சாகும் வரை போரிடுவதே கொள்கையாக இருந்தது’, உள்ளூர்ப் பொதுமக்கள் அரசாங்கத்தினால் கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தை நோக்கி வெளியேறியதையடுத்து இறுதியாக எஞ்சியுள்ள பிரதேசங்களை நிர்வகிப்பதற்கான முதன்மை மையமாக ஆனந்தபுரம் மாறியது.
இருந்தாலும் நிர்வாகத்திலிருந்த போராளிகள் சண்டையில் அல்லது பாதுகாப்பு நடவடிக்கையில் மீள ஈடுபடுத்தப்பட்டமையால் இவ்வாறு நிர்வகிப்பது பெரும்பாலும் குழப்பமானதாக இருந்தது.
விடுதலைப் புலிகள் அமைத்த ஆனந்தபுரம் பெட்டி
ஆனந்தபுரத்தினை ஒரு இராணுவக்கோட்டையாக அல்லது பாதுகாப்பு ‘பெட்டி’ என அழைக்கப்பட்ட பகுதியாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகளின் தளபதிகள் மேற்கொண்டார்கள்.
தற்போதைய பாதுகாப்பு முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்துவதற்காக,அகழிகளை அமைத்ததுடன், அகழ்வு இயந்திரங்களைப் பயன்படுத்தி, சரக்கு கொள்கலன்களை ஆழமான பதுங்கு குழிகளுக்குள் புதைத்து, அவற்றைப் பின்னர் விமானத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக தென்னங்குற்றிகள், மண்மூட்டைகள் மற்றும் மண் நிரப்பிய பீப்பாய்கள் ஆகியவற்றைக் கொண்டு பலப்படுத்தி, போராளிகள் ஒரு தொகுதி இரகசியத்தளங்களை உருவாக்கினார்கள்.
மின்பிறப்பாக்கிகள் மின்சாரத்தை விநியோகம் செய்தன, கொள்கலன்களுக்கு உள்ளே கடும் வெப்பமாக இருக்கும்.
வளைந்து நெளிந்து செல்லும் வடிவில் புதைக்கப்பட்ட பன்னிரெண்டு கொள்கலன்கள் மேற்கு நோக்கி புதுக்குடியிருப்பு பக்கமுள்ள ஆனந்தபுரத்தின் ஒரு புதிய கட்டளை மையமாக மாறியது.
அருகிலுள்ள ஏனைய கொள்கலன்கள் கூடுதலான மருத்துவ உதவி தொடர்பான தேவைகளுக்காவும் சண்டை ஓய்வான நேரங்களில் மருத்துவ உதவி தேவையானவர்களை அகற்றுவதற்கான இடைவழி மையங்களாகப் பயன்படுத்துவதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் சீருடைகளைத் தயாரிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடம் மாற்றியமைக்கப்பட்டு அடிப்படை வசதிகளைக் கொண்ட அறுவைச் சிகிச்சை அறையுடன் கூடிய ஆனந்தபுரத்தின் பிரதான மருத்துவ நிலையமாக இருந்தது.
பிரபாகரனைப் பாதுகாப்பதற்காக அவரைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் இருந்தன.
விரைவாக உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் பெட்டியின் எல்லைகள் தாக்குதல்கள் காரணமாக வேகமாக குறுகத் தொடங்கியது. ஆனந்தபுரம் பெட்டி மூன்று பக்கங்கள் நிலப்பரப்பினைக் கொண்டிருந்த அதேவேளையில் கிழக்காக இருந்த நான்காவது பக்கம் நடந்து சென்று கடக்கக் ககூடிய அளவிற்கு ஆழமான பருவகால ஏரியின் மழை நீரைக் கொண்டிருந்தது.
மார்ச் மாதம் இறுதிப் பகுதியில், விடுதலைப் புலிகள் தம்மிடம் எஞ்சியிருந்த கனரக இயந்திரத் துப்பாக்கிகளில் பெரும்பாலானவற்றை நிலைநிறுத்தி வைத்திருத்த பெட்டியின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் பலத்த தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேற்குப் பகுதி தளபதி கேணல் தீபனின் கீழ் இருந்த அணிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த அதேவேளையில், தெற்குப் பகுதி கேணல் ஆதவன் என்றழைக்கப்படும் கடாபியினால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
தெற்குப் பகுதியில், ஆரம்பத்தில் ஆனந்தபுரத்திற்கு தெற்கேயுள்ள கேப்பாப்புலவுப் பிரதேசத்தில், இன்னுமொரு நீண்ட கால சண்டைப் போராளியான சாட்சி மூன்று (W3) பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
பாரிய இழப்புக்களைக் குறைப்பதற்காக இவரும், இவரோடு இருந்தவர்களும், 2-3 கிலோ மீற்றர் முன்னரங்க நிலையில் 3 பேர் கொண்ட குழுக்களாக ஒவ்வொரு 50 – 100 மீற்றர் தூரத்திற்கு விடப்பட்டார்கள்.
அத்துடன் அவர்களுக்கு பின்னால் கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் மேலதிக போராளிகள் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஏ.கே 47 துப்பாக்கிகளையும், இலகு இயந்திரத் துப்பாக்கிகளையும், கைக்குண்டுகளையும் வைத்திருந்தார்கள்.
அத்துடன் மேலும் சில போராளிகள் பதுங்கிச் சூட்டினை வழங்குவதற்காக நிலை நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தினை தாமதமாக்குவதற்கு நிலக்கண்ணிகளைப் புதைப்பதற்கு அவர்களிடம் நேரம் இருக்கவில்லை.
அவர்கள் மிகப்பெரிய அளவிலான எதிரிப்படைகளை முகங்கொடுத்தார்கள். அத்துடன் மார்ச் பிற்பகுதியில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தொடையில் குண்டுச் சிதறலால் ஏற்பட்ட காயத்துடன் தெற்கு முன்னரங்க நிலையில் இருந்து சாட்சி 3 அப்புறப்படுத்தப்பட்டார்.
இது சடுதியாக சமச்சீரற்ற ஒரு சண்டையாக மாறியது. சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆனந்தபுரம் பெட்டியினுள் விடுதலைப் புலிகளைச் சுற்றிவளைக்க முயன்ற வேளையில் தமது சொந்தப்படையினருக்கே காயத்தினை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காரணமாக,அவர்கள் தமது ஆட்டிலறி தாக்குதலை மட்டுப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
ஆனால், கனரக இயந்திர துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆர்.பி.ஜிகள் ஆகியவற்றில் இருந்து சரமாரியான தாக்குதல்கள் நடத்துவது குறித்து அவர்கள் எந்த தயக்கமும் கொண்டிருக்கவில்லை.
அதேசமயம், தலைக்கு மேலாக, இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் விமானங்கள் போன்ற சிறிலங்கா விமானப்படை சண்டை விமானங்கள், மற்றும் ஆளில்லாத வேவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், ஒவ்வொரு நாளும் கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளைப் பொஸ்பரசு உட்பட ஏராளமான குண்டுகளைப் போட்டு, பெட்டியின் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டன.
மாறாக, விடுதலைப் புலிகள் எதிரியின் வெடிக்காத வெடிபொருட்களை சேகரித்து, அவற்றினை மிகவும் ஆபத்தான வகையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களாக மீளப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில், போர் அனுபவம் உள்ள போராளியான சாட்சி 2 அவர் அங்கு செல்லும் வழியில் இறந்த உடல்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த நாய்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
அத்துடன் அவருடன் உயிர் தப்பியிருந்த அவரது தோழர்களும் தம்மிடம் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட வெடிபொருட்களை எவ்வாறு மிகவும் அவதானத்துடனும் கட்டுப்பாடுடனும் பயன்படுத்தியதாக விபரிக்கின்றார்.
மேலும், ‘வெடிபொருட்களை கொண்டு வருவதற்கு உயிர்கள் இழக்கப்பட்டன. எனவே நாங்கள் பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கிறோம் என எப்போதும் எங்களுக்குச் சொல்லப்பட்டது’.
இந்தச் சூழ்நிலையில், தாம் அகப்பட்டுக் கொண்டிருந்த நிலப்பரப்பு பற்றி விடுதலைப் புலிகளுக்கு இருந்த கூடுதலான அறிவு சிறிய அளவிலே அவர்களுக்கு சாதகமானதாக இருந்தது.
சிறிலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பினை நெருங்கிய போது விடுதலைப் புலிகள் அவர்களது தற்கொலை தாக்குதலாளிகளான கரும்புலிகளைப் பயன்படுத்தி ஒரு பதில் தாக்குதலை மேற்கொள்ள முயற்சி செய்தார்கள்.
ஆனால் மார்ச் 01 இல்,அரச செய்தித்தாளான, டெய்லி நியூஸ் சிறிலங்கா இராணுவம் தற்போது புதுக்குடியிருப்பின் புறநகர் பகுதியில் இருப்பதாக அறிவித்தது. 16 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவான பிரதேசத்தில் பரந்து கிடக்கும் விடுதலைப் புலிகளின் ‘படைத்தள நகரம்’ என அதனை அது விபரித்தது.
விரைவிலேயே, ‘புதுக்குடியிருப்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் நேற்று (மார்ச் 3) விழுந்த போது விடுதலைப் புலிகள் தமது பிடியில் இருந்த கடைசி நகரத்தினை இழந்து விட்டார்கள்’ என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை தெரிவித்தது.
புதிய தகவலுடன் இரண்டு நாட்களின் பின்னர் சிறிலங்கா இராணுவம் புதுக்குடியிருப்புச் சந்தியினையும் கைப்பற்றி விட்டதாக தெரிவித்தது.
இந்த முக்கிய இடம் ஆனந்தபுரத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் கட்டளை மையத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தது. அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் இப்போது ஓயாத சண்டையினை புதுக்குடியிருப்பின் கிழக்கு நோக்கிய பகுதிக்கு ஊடாகத் தொடங்கினார்கள்.
இதன்மூலம் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வளையங்களை மெது மெதுவாக உடைத்துப் போராளிகளை வெறித்தோடிக்கிடந்த கட்டிடத் தொகுதிகளின் ஊடாக பின்வாங்க நிர்ப்பந்தித்தார்கள். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறி வந்த போது அந்தக் கட்டடங்களையும் அழித்தார்கள்.
விடுதலைப் புலிகள் ஆதரவு அணிகள் தமது போராளிகளுடன் பின்வாங்கிச் சென்ற வேளையில் தமது முன்னரங்க நிலையினைத் தக்க வைக்கும் முயற்சியில் புதிய பதுங்குகுழிகளை வெட்டினார்கள்.
ஆனால் நாட்கள் கடந்து செல்கையில், ஆனந்தபுரத்தினைச் சுற்றியிருந்த பாதுகாப்பு எல்லைக் கோடு சுருங்கிக் கொண்டே போனது.
மார்ச் 17 இல், ஆனந்தபுரத்திற்கு வடக்காக வெறும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இரணைப்பாலைச் சந்தியை, முதல் நாள் தமது படைகள் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
அதேவேளை,‘கடுமையான எதிர்ப்புகளுக்கு’ மத்தியிலும் சிறிலங்கா அரசாங்கப்படைகள் பயங்கரவாதிகளின் பாதுகாப்பு நிலைகளை தொடர்ச்சியாக ஊடுருவியதாக’ மார்ச் 20ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கையில் அது புகழ்ந்து பேசியது.
ஆனந்தபுரம் கோட்டைக்கு உள்ளே, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை நிர்வகிப்பதற்கு பொறுப்பாக இருந்த சாட்சி1 இனையும் அவரது அணியையும் எஞ்சியுள்ள ஆயுதக் களஞ்சியங்களை இயன்ற அளவிற்கு இந்த தாக்குதலில் இருந்து தொலைவில், இந்தப் பெட்டியின் கிழக்கு மூலையிலுள்ள பச்சைப்புல்மோட்டைக்கு இடமாற்றம் செய்யுமாறு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
ஆனந்தபுரம் பெட்டியிலிருந்து மருத்துவ உதவிக்கான வெளியேற்றங்கள்
தொடர்ச்சியான, முற்றிலும் சமநிலையற்ற போர் நடைபெறுகையில் மருத்துவ ரீதியான உதவிகளுக்கு ஆட்களை அங்கிருந்து கொண்டு செல்வது மிகவும் அவசியமானதாக இருந்தது. விடுதலைப் புலிகள் தனது நிலப்பரப்புகளை இழந்ததுடன் பிரதான வீதிகளின் கட்டுப்பாட்டையும் இழந்தது.
அத்துடன் சாட்சி நான்கு 15 வீதிகளில் நிலக்கண்ணிகளை அகற்றும் பணியில் இருந்து கடுமையாக காயப்பட்ட போராளிகளை புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து அருகிலுள்ள மருத்துவ நிலையங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிக்கு மாற்றப்பட்டார்.
ஆனந்தபுரத்தில் காயப்பட்டு கொள்கலன்களில் இருந்தவர்களை அங்கிருந்து இரட்டைவாய்க்காலிலுள்ள ஒரு தற்காலிக அறுவைச் சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சூழவுள்ள பிரதேசத்திலுள்ள துணை மருத்துவ நிலையங்களில் ஒன்றுக்கு வாகனத்தில் கொண்டு செல்வது அவரது பணிகளில் ஒன்றாக இருந்தது.
அப்புறப்படுத்தம் அணிகள் ஆளில்லா வேவு விமானங்களின் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் இரவு நேரத்தில் மட்டும் செயற்பட்டார்கள். எவ்வாறெனினும், சிறிலங்கா இராணுவத்தினர் மிக மிக நெருக்கமாக முன்னேறி வந்த நிலையிலும், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியிலும் இந்தப் பணி மிகவும் ஆபத்தானதாக மாறியது.
இப்போது, ஆனந்தபுரத்தில் பொதுமக்கள் எவரும் இருக்கக்கூடாது என்று இருந்த போதிலும், சாட்சி 4 மற்றும் ஏனைய அணிகள் அங்கிருந்து காப்பாற்றிய அனைவரும் போராளிகளாக இருக்கவில்லை.
பெரும்பாலான வயல்நிலங்கள் இழக்கப்பட்டிருந்தமையால் ஜனவரி -பெப்ரவரி மாத பாரம்பரிய அறுவடைக் காலத்தில் புதிய பயிர்களின் விளைச்சல்கள் எதுவும் இருக்கவில்லை, அத்துடன் பாதுகாப்பு வலையத்தில் இருந்த பொதுமக்களில் பெரியளவானோர் மெது மெதுவாக பட்டினியால் வாடிக்கொண்டிருந்தார்கள்.
சிலர் தமது உயிர்களை ஆபத்திற்கு உள்ளாக்கி தேங்காய்களைத் தேடி ஆனந்தபுரத்தினுள் சென்றார்கள், அதேவேளையில், பல்வேறு பொதுமக்கள் இவ்வாறே தமது உயிர்களை ஆபத்திற்கு உள்ளாக்கி தமது வீடுகளில் இருந்து அத்தியாவசியமான உடைமைகளை மீட்டெடுப்பதற்கு சென்றார்கள்.
முன்னர் விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த சாட்சி 5 , மார்ச் ஆரம்பத்தில், யன்னல்கள் அகற்றப்பட்டு உலோகத் தகடுகளால் பலப்படுத்தப்பட்ட 4X4 பொதுமக்கள் வாகனத்தில் ஆனந்தபுரத்தில் இருந்து காயப்பட்டவர்களை வெளியேற்றும் பணியினை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
காயமடைந்தவர்களை வாகனங்களில் வெளியேற்றும் நடவடிக்கைகளின் போது அந்த வாகனங்கள் கூடுதலாக நன்கு இலக்கு வைக்கப்பட்டு எறிகணைத் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி தாக்குதல்கள் மற்றும் போர் டாங்கிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின, இதனால் இந்த மீட்பு வாகனங்கள் மருத்துவ உதவியாளர் இல்லாமல் இரண்டு பேரை கொண்ட குழுக்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.
சாட்சி 5 கூறுகையில், தான் பார்த்த காயங்களில் மூன்றில் ஒரு பங்கு காயங்கள் வெள்ளைப் பொஸ்பரசுடன் தொடர்புபட்ட காயங்கள் போல் இருந்ததாக அவர் மதிப்பிடுகின்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் ‘கடுமையான எரிவு’ உணர்வினை அனுபவித்ததுடன் அவர்களது தோல் கறுப்பாகவும் மாறியது. ‘இது தசையினை ஒரு வகையில் அழுகிய இறைச்சியைப் போல் ஆக்கியதாக’ அவர் விபரிக்கின்றார்.
மார்ச் இறுதிப் பகுதியில் ஒரு நாள் விடிகாலையில், சாட்சி 5 ஆனந்தபுரத்திலுள்ள மருத்துவ உதவி வழங்கப்படும் ஒரு கொள்கலனுக்கு அருகில் சென்று கொண்டிருக்கையில் அவர் குண்டுச் சிதறலால் தாக்கப்பட்டதுடன், அந்த சிதறல் அவரது குடலையும் வயிற்றையும் துளைத்துச் சென்றது.
இப்போது அவரையே மருத்துவ உதவிக்காக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், வான் வழிக் கண்காணிப்பும், தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களும் இடம்பெற்று வந்தமையால் முன்னர் பொக்கணையில் ஆரம்பப் பாடசாலையாக இருந்த பொதுமக்களுக்கான தற்காலிக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்வதற்கு இரவு 7 மணி வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
அங்கே பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் என 500 இற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மத்தியில் நிலத்தில் போடப்பட்ட தறப்பாளில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவர் இதில் உயிர் பிழைத்துக் கொண்டாலும், மயக்க மருந்துகள் மட்டும் அன்றிப் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அவரைச் சுற்றியிருந்த பலரும் தேவையில்லாமல் இறந்ததை அவரால் பார்க்க மட்டுமே முடிந்தது.
இந்த நேரத்தில், சாட்சி 2 உம் தலையிலும் தொடையிலும் கடுமையான காயங்களுடன் பெட்டியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட இன்னுமொரு போராளியாவார். இவர் விசுவமடுவினைப் பாதுகாக்கும் முயற்சியில் முன்னர் பங்கேற்றிருந்தார்.
சிறிலங்கா இராணுவமும் சிறிலங்கா விமானப் படையினரும் பாதுகாப்பு வலயங்களில்’ இருந்த பொதுமக்களுக்கான மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவ நிலையங்கள் மீதும் எறிகணை மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
இதனால், பெருமளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட அதேவேளையில் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளும் அழிக்கப்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளுமே சீர்குலைந்து போயின.
விடுதலைப் புலிகளின் சட்டப் பிரிவில் ஆரம்பத்தில் இருந்து இப்போது சண்டைக்கு விடப்பட்ட சாட்சி 6 பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை குழந்தை பிரசவிப்பதற்காக புதுக்குடியிருப்பில் இருந்த மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு சென்றார் என்பது பற்றியும் அவர் அங்கு சென்றபோது இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக அந்த மருத்துவமனை கைவிடப்பட்டிருப்பதைக் கண்டது பற்றியும் கூறுகிறார்.
சேதமடைந்திருந்த கட்டடத்தில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்ட ஒரு மெத்தையிலே அவரது மனைவி தனது குழந்தையைப் பிரசவித்தார். அதன்பின்னர், அவர்கள் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டார்கள்.
விடுதலைப் புலிகள் மருத்துவ வழங்கல்களில் நேரடியாக ஈடுபட்டிருந்த போராளி ஒருவர் பொதுமக்களுக்கான மருந்துப் பொருட்கள் நெருக்கடியான அளவினை அடைந்த போது விடுதலைப் புலிகள் தம்மிடம் இறுதி இருப்பில் இருந்த மயக்க மருந்துகள் உட்பட தம்மிடமிருந்த வளங்களை பிரித்து ஒழுங்குபடுத்தியதாகவும் தமது மருத்துவர்களில் சிலரை பொதுமக்களுக்கான மருத்துவ நிலையங்களில் மாற்றிப் பணியில் ஈடுபடுத்தியதாகவும் விபரிக்கின்றார்.
வெறும் போர் நடவடிக்கைக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், வன்னியிலுள்ள பொதுமக்களுக்கான மருத்துவ உதவியை அரசாங்கம் நிறுத்தியமை கடுமையாகக் காயமடையாத தமது போராளிகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களை வேகமாகவே களமுனைக்கு அனுப்பும் விடுதலைப் புலிகளின் திறனைக் குறைக்கும் வகையில் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகள் சீர்குலைதலும்,விடுதலைப் புலிகள் இனர் தலையிட்டு உதவுதலும்
2009 பெப்ரவரி 15 இல், புதுமாத்தளன் மருத்துவமனையில் இருந்த மருத்துவ அதிகாரி, தனது மதிப்பீட்டிற்கிணங்க, உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த நபர்கள் சுமார் 200, 000 பேர் உட்பட விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் இன்னும் இருக்கும் பொதுமக்களுக்கு சேவைபுரிவதற்கு தானும் தனது சகதோழர்களும் முயற்சி செய்யும் வேளையில் தனக்கு ஏற்பட்டுள்ள ஆழ்ந்த விரக்தி நிலையைக் குறிப்பிட்டு, கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிலைமை அறிக்கை ஒன்றினை அனுப்பினார். நீர் மற்றும் சுகாதாரம் என்பன நெருக்கடியில் இருப்பதாக அவர் எழுதினார்.
நீடித்த ஊட்டச்சத்துக் குறைபாடு பெரியளவில் அச்சுறுத்துவதாக இருந்தது. மருத்துவப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்து விட்டன.
புதுமாத்தளனில் உள்ள அவரது அணியிடம் அறுவைச் சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்ட ஒரு பாடசாலையைத் தவிர எதுவுமே இருக்கவில்லை, அத்துடன் அங்கு அவர்களிடம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மட்டும் அல்லாமல் கிருமிகளைச் சுத்தம் செய்யும் பொருட்களும் இருக்கவில்லை.
அவரது நோயாளிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்த் தொற்றினைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக அவரும் அவரது சகபாடிகளும் நோய்த் தொற்று ஏற்பட்ட பகுதிகளை மீண்டும் துண்டித்து அகற்ற வேண்டியிருந்தது.
அருகிலுள்ள ஏனைய களமருத்துவமனைகள் ஒன்றன் பின் ஒன்றாக கைவிடப்பட்டு வரும் நிலையில் ‘எமது சுகாதார சேவைகள் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலையும்’ தறுவாயில் இருப்பதாக அவர் எழுதினார்.
விடுதலைப் புலிகள் தமது போராளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பெரும்பாலும் மரங்களின் கீழ் தமது சொந்த மருத்துவப் பிரிவுகளை நடத்தி வந்தார்கள். அதன் விநியோக வழிகள் தடுக்கப்பட்டமையாலும் வேகமாக அதிகரித்து வந்த இழப்பு எண்ணிக்கைகளாலும் இப்போது விடுதலைப் புலிகள் மயக்கமருந்துகள் உட்பட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறைக்கு முகங்கொடுத்தார்கள்.
இருப்பினும், போர் வலயத்தில் எவரும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில், மயக்க மருந்துகளின் விநியோகங்கள் உட்பட பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை அரசாங்க அதிகாரிகள் நிறுத்துவதற்கு முடிவு செய்த போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த குறைந்தளவான விநியோகப் பொருட்களை போராளிகள் மற்றும் பொதுமக்களின் நிலையங்களுக்கு பகிர்ந்தளித்து ஒருங்கிணைத்து வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் பொதுமக்கள் வழங்கல் பாதையையும் விடுதலைப் புலிகள் இராணுவ வழங்கல் பாதையும் தனித்தனியாகப் பேணுவது மிகவும் கடினமானதாக மாறியது.
பொதுமக்களுக்கான மருத்துவர்கள் காயப்பட்டவர்களினால் திணறிக் கொண்டிருந்தமையால் விடுதலைப் புலிகள் பயிற்றுவிக்கப்பட்ட சில மருத்துவர்கள் பொதுமக்களின் மருத்துவ நிலையங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
ஆயுதம் தரித்த விடுதலைப் புலிகள் பிரசன்னம் எந்தவொரு மருத்துவமனையிலும் இருக்கவில்லை என விடுதலைப் புலிகளின் நீதிப் பிரிவினைச் சேர்ந்த சாட்சி 6 கூறுகின்றார்.
அத்துடன் ‘பொதுமக்களுக்கான மருத்துவமனைகளுக்குள் சீருடைகளுடனோ அல்லது ஆயுதங்களுடனோ எந்தவொரு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் வரக்கூடாது’ என்பதில் பொதுமக்களுக்கான மருத்துவப் பணியாளர்கள் உறுதியாக இருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மிகுதி நாளை தொடரும்.


