மேலும்

தடையை மீறி எரிபொருள் விநியோகம் – இந்திய மாலுமிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஈரானிய கப்பல்

சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்தில் சிக்கியிருந்த, கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாலுமிகளைக் கொண்ட ஈரானியக் கப்பல்களில் ஒன்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட கப்பலுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அனுமதி அளித்ததன் மூலமே இது சாத்தியமானது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையின் காரணமாக, சுமார் 20 ஈரானியக் கப்பல்கள் கடந்த சில மாதங்களாக சிறிலங்காவின் கடல் எல்லைக்கு வெளியே சிக்கியுள்ளன.

இந்த ஈரானியக் கப்பல்களில் உள்ள பணியாளர்களின் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் இந்திய மாலுமிகள் இருப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எரிபொருள் பற்றாக்குறையால் தொடர்ந்து பயணிக்க முடியாமல், இன்னும் சில கப்பல்கள் சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்திலேயே தரித்து நிற்கின்றன என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *