நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
தென்னாபிரிக்க மனித உரிமை சட்டவாளரும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளைக்கு, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்த உயர் விருது வழங்கப்படவுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான நவி பிள்ளை, 1941 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்தார்.
இன ஒதுக்கல் கொள்கையின் கீழ் வளர்ந்து, தென்னாபிரிக்காவின் முன்னோடிப் பெண் சட்டவாளர்களில் ஒருவரானார்.
தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான செயற்பாட்டாளர்களுக்காக வாதாடியதுடன், பாகுபாடு நிறைந்த சிறை நிலைமைகளையும் எதிர்த்தார்.
இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர் அவர் ருவாண்டாவுக்கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.
அங்கு, பாலியல் வன்முறையை ஒரு சாத்தியமான இனப்படுகொலைச் செயலாக சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதில் அவரது பணி ஒரு முக்கியப் பங்காற்றியது.
பின்னர் அவர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், 2008 முதல் 2014 வரை ஐ.நா. மனித உரிமை ஆணையாளராகவும் பணியாற்றினார்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் குறித்த அனைத்துலக விவாதங்களில் நவி பிள்ளை முக்கியப் பங்காற்றினார்.
2013ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, நவி பிள்ளை அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களைச் சந்தித்து, போர்க்கால மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்பது, ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவது, மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை குறித்த கவலைகளை எழுப்பினார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளுக்கு அவர் ஆதரவாக இருந்தார்.
அண்மையில் அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா. ஆணைக்குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
