மேலும்

பயங்கரவாதத்தைத் தடுக்க இரண்டு மாதங்களில் புதிய சட்டமூலம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு,  தனிநபர்களையோ அல்லது பிற தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு புதிய சட்டமூலம், இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓராண்டுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, ​​காணாமல் போனவர்களைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது.

அப்போது, ​​காணாமல் போனவர்களைப் பற்றி விசாரிக்கும் அமைப்பு செயலிழந்திருந்தது.

ஓராண்டுக்குள், தேவையான ஆள்சேர்ப்புகள் செய்யப்பட்டு, காணாமல் போனோருக்கான பணியகத்திற்கான ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டன.

காணாமல் போனோருக்கான பணியகம் மற்றும் முந்தைய அரசாங்கங்களால் உங்களுக்குப் பல சிக்கல்கள் இருந்தன. அப்போது நிலவிய அரசியல் இதற்கு வழிவகுத்தது.

2009-ல் போர் முடிவடைந்த  நிலையில் முந்தைய அரசாங்கங்களால் இவற்றைச் செய்திருக்க முடியும்.  

ஆனால், காணாமல் போனவர்கள் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன.  இந்த விசாரணைகளை முடிக்க வேண்டிய தேவை முந்தைய அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை.

30 ஆண்டுகாலப் போரின் காரணமாக, வடக்கும் தெற்கும் பெருமளவு இரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தின. இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படக்கூடாது.

மீண்டும் ஒரு போர் ஏற்படுவதைத் தடுக்க, சகவாழ்வும் நட்புறவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அத்துடன் விசாரணைகளும் முடிவுக்கு வர வேண்டும். தற்போதைய அரசாங்கத்திற்கு இது மிகவும் அவசியமாக உள்ளது.

வடக்கில் நிலம் விடுவிக்கும் பணி தற்போது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீதிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை இனிமேலும் இரண்டாம் தரக் குடிமக்களாக உணர வைக்க முடியாது. வடக்கு மக்களுக்கு நாம் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அதற்கு நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றால் நஞ்சூட்டப்பட்ட ஒரு நிலத்தை விடுவிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு அரசாங்கம் உறுதியுடன் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் சமூக  மற்றும் மக்கள் பிரதிநிதிகள், காணாமல் போனவர்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் மற்றும் புகார்கள் குறித்த தங்கள் கவலைகளை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *