மேலும்

ஈரானிய எண்ணெயை ஏற்றும் கப்பலை சிறிலங்காவுக்கு தெற்கே கைப்பற்றியது அமெரிக்கா

சிறிலங்காவின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள அனைத்துலக கடற்பரப்பில், எம்.ரி. டவினா (MT Davina) என்ற, நாடற்ற, தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை, அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத சிறிலங்காவின்  மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், சிறிலங்கா  கடல் எல்லைக்கு வெளியே அமெரிக்கா அந்தக் கப்பலைக் கைப்பற்றியதை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட நேரத்தில் லெனோரே (Lenore) என்ற பெயருடன் இயங்கியதாக எம்.ரி. டவினா (IMO 9259367) என்ற கப்பல், ஈரானிய எண்ணெயை சட்டவிரோதமாக கொண்டு செல்ல உதவியதற்காக அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு பணியகத்தினால் தடைசெய்யப்பட்ட  நாடற்ற மசகு எண்ணெய் கப்பல் என்று தெரியவந்துள்ளது.

அந்தக் கப்பல் சிறிலங்காவின் தெற்கே உள்ள அனைத்துலக கடல் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

“நேற்றுமுன்தினம் அதிகாலை  இந்தோ-பசுபிக் கட்டளை மையத்தின் பொறுப்புப் பகுதிக்குள், இந்தியப் பெருங்கடலில் இருந்த, எம்.ரி. டவினாவை, அமெரிக்கப் படைகள்  தடுத்து, சோதனை செய்தன.

சட்டவிரோத வலையமைப்புகளைச் சீர்குலைக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் கப்பல்கள் எங்கு செயல்பட்டாலும் அவற்றைத் தடுக்கவும், நாங்கள் உலகளாவிய கடல்சார் அமலாக்கத்தைத் தொடர்வோம்.

தடைசெய்யப்பட்ட சக்திகள் அனைத்துலக கடற்பரப்பை ஒரு கேடயமாகப் பயன்படுத்த முடியாது.

சட்டவிரோத சக்திகளுக்கும் அவற்றின் கப்பல்களுக்கும் கடல்சார் களத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான உரிமையை அமெரிக்க போர் துறை தொடர்ந்து மறுக்கும்”  என்று அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை மையம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக கடல்சார் சட்டத்தை மீறி, அடிக்கடி தனது தானியங்கி அடையாள அமைப்பை (AIS) அணைத்து விட்டு வந்த அந்தக் கப்பல், சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து தனது AIS சமிக்ஞையை அனுப்பத் தொடங்கியதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, இவ்வாறு தடை செய்யப்பட்ட கப்பல்கள் அவ்வப்போது சிறிலங்காவின் எல்லைக்கு அருகே வந்தாலும், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்தியப் பெருங்கடலில் சுற்றித் திரிவது குறித்து கொழும்பில் உள்ள அதிகார வட்டாரங்களுக்குள்  கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *