மேலும்

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆயர் பேரவைக்கு கடிதம்

சிறிலங்காவில் போர்க்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு, தேசிய ஆயர் பேரவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள 112 கத்தோலிக்க திருச்சபை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு குழு, கையெழுத்திட்ட இந்த மனு நேற்று ஆயர்கள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸைக் குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரம் குறித்து  கவனம் செலுத்துமாறு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளாக நீடித்த  போர், சிறிலங்காவில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கூறியிருந்தார்.

இரத்தினபுரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை ஆதரித்து பாதுகாக்குமாறு ஆயர் பேரவைக்கு அனுப்பப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், கத்தோலிக்கர்கள் உட்பட தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் இனப்படுகொலை தொடர்பாக தகவலறிந்த மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருட்தந்தை  ஜீவந்த பீரிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறி, ஆயர் பேரவை, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பிரச்சினைகள் குறித்து தகவலறிந்த, உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக, வரலாற்று மற்றும் அரசியல் யதார்த்தங்கள் குறித்து குருக்களுக்கு ஆயர் பேரவை கல்வி புகட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, இன மோதல் மற்றும் போர் குறித்து தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிக்குமாறும் அவர்கள்  ஆயர் பேரவையை வலியுறுத்தியுள்ளனர்.

மனுவில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, கொழும்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஷெரார்ட் ஜெயவர்தன,  அருட்தந்தையின் அறிக்கையின் சாராம்சத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

இது ஒரு சிங்கள கத்தோலிக்க பாதிரியாரால் ஒடுக்கப்பட்ட தமிழர்களுடன் வெளிப்படுத்தப்பட்ட ஓர் முக்கியமான ஒற்றுமை வெளிப்பாடாகும்.

மேலும் இந்த உரையாடல், நீதியுடன் கூடிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது, என்று அவர், தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், எளிமையான வாழ்க்கை வாழ்வதிலும், ஒதுக்கப்பட்ட மக்களின் இரக்கமுள்ள, அகிம்சைப் பாதுகாவலராக இருப்பதிலும் நன்கு அறியப்பட்டவர் என்று செயற்பாட்டாளர் சுனிதா கங்கானி, குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து சமூக அநீதிக்கு எதிராக நிற்கிறார் மற்றும் பல சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்  என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *