மேலும்

பலாலி காணிகள் விடுவிப்பு குறித்த தீர்மானமின்றி திரும்பினார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று, யாழ்ப்பாணம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள,  விடுவிக்கப்படாத பிரதேசங்களில் கள ஆய்வு ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பலாலி வீதிக்கு கிழக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்பட்ட போது அந்தக் காணிகளுக்கான, நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என்றும்,  அரசாங்க அதிபரால் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுவதற்கும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், அவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

எனினும், சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் எந்தவொரு காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் தீர்க்கமான பதிலை அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *