ரஷ்ய பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு
ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மொஸ்கோவில் இன்று ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மொஸ்கோவில் இன்று முதல் 29 ஆம் நாள் வரை நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது அனைத்துலக மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதிகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யா சென்றுள்ளார்.
இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல்களின் போது, இரு தரப்பினரும் வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில், குறிப்பாக இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட பயிற்சிப் பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில், சிறிலங்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ரஷ்யாவில் தற்போது பணியாற்றி வரும், முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்பான விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



