சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கோரும் பிரேரணை
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கோரும், பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை, சமூக ஊடகங்களின் அதீத பயன்பாட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, சிறுவர்களின் சமூக ஊடகத் தள அணுகலை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை இயற்றக் கோருகிறது.
சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடற்ற அணுகல், சிறுவர்களிடையே மன அழுத்தம் அதிகரிப்பதற்கும், கல்விச் செயல்திறன் குறைவதற்கும், இணையவழி கொடுமைப்படுத்துதல் சம்பவங்கள் மற்றும் ஆபாசமான, பாதுகாப்பற்ற இணைய உள்ளடக்கங்களுக்கு ஆளாவதற்கும் வழிவகுத்துள்ளதாக அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள், சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே சட்டங்களையும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன என்று தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயிப்பது, சமூக ஊடக நிறுவனங்களுக்கு வயது சரிபார்ப்பு வழிமுறைகளைக் கட்டாயமாக்குவது, மற்றும் முன்மொழியப்பட்ட சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது அபராதங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் விதிப்பது ஆகியன குறித்து இந்தப் பிரேரணையில் முன்மொழியப்பட்டுள்ளது.
பெரியவர்களால் இயக்கப்படும் கணக்குகள் மூலம் குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதை கையாள்வதற்கான நடவடிக்கைகளையும் இந்தப் பிரேரணை கோருகிறது.
