நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
கட்சி இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், அதன் தெரிவுகளை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நிலைமையைப் பார்ப்போம். இன்னும் சிறிது காலம் இருக்கிறது. நாங்கள் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை.
இதில் ஒரு தார்மீகப் பிரச்சினை உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பரிசீலித்து வருகிறோம்,” என்றும் நிஹால் அபேசிங்க மேலும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
