வெலிக்கடைச் சிறைக்குள் 16 அலைபேசிகள் – தொடர்பில் இருந்தவர்களும் சிக்குவர்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 16 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைப் பிரிவு மற்றும் அருகிலுள்ள ஒரு சிறைச்சாலைப் பிரிவில், வெள்ளிக்கிழமை இரவு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 16 அலைபேசிகளும் கண்டபிடிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் சுமார் 150 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் அலைபேசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்கு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையிலான கூட்டுச் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு அலைபேசிகள் மற்றும் துணைப் பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அடையாளம் காண சிறைச்சாலைத் திணைக்களத்தில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டும் அனைவரும், எந்த பாகுபாடுமின்றி சட்டத்தின் கீழ் கடுமையாகக் கையாளப்படுவார்கள்.
நம்பகமான தகவல்கள் கிடைத்தவுடன் எந்தவொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வெலிக்கடைச் சிறைச்சாலை சோதனையின் போது மீட்கப்பட்ட அலைபேசிகள் இன்னும் முறையாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர்களை அடையாளம் காண காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலைபேசி பதிவுகள் மற்றும் தரவுகள் மூலம், கைதிகளுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டறிந்து, அனைவருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
