மோதலின் போதான பாலியல் வன்முறைகள் – ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்கா மௌனம்
மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஐ.நாவின் புதிய அறிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.
சிறிலங்காவில் போரின் போதும் அதற்குப் பின்னரும்- 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் ஐ.நாவின் ஆய்வு அறிக்கை ஒன்று கடந்த 13ஆம் திகதி வெளியிடப்பட்டது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் சிறிலங்காவில் போரின் போது திட்டமிட்ட பரந்தளவிலான பாலியல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், தமிழர்களை குறிவைத்து இந்தக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களாகவும் இனஅழிப்பாகவும் கருதக் கூடிய இந்தக் குற்றச் செயல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நீதியை வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள இந்த அறிக்கையில், அனைத்துலக நாடுகள், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதற்காக உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்துமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அனைத்துலக சட்டங்கள், பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் பாலியல் வன்முறைகள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும், தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிக்கை வெளியாகி ஆறு நாட்களாகியும் சிறிலங்கா அரசிடம் இருந்து பதில் எதுவும் வெளியாகவில்லை.
அதேவேளை இந்த அறிக்கை குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, பாதுகாப்பு அமைச்சு இந்த அறிக்கையை இன்னமும் மதிப்பீடு செய்து வருவதாகவும், பரிந்துரைகள் மற்றும் கண்டறிவுகள் தொடர்பாக விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
