காலக்கெடுவிற்குள் முன்னேற்றங்கள் நிகழவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும், அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இரண்டு வாரம் , ஒரு மாதம் என காலக்கெடுக்களை பலமுறை அறிவித்திருந்தும், அவை முன்னேற்றங்கள் இல்லாமல் கடந்துவிட்டன என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல், தற்போதைய அரசாங்கம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என்று நான் நினைக்கவில்லை.
இருப்பினும், அவை மிகவும் மெதுவாக நகர்கின்றன. தாமதங்கள் சில தரப்பினரின் செல்வாக்கு காரணமாக இருந்ததா அல்லது ஆதாரங்கள் இல்லாததால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அரசாங்கம் தகவல்களை மறைக்க எந்த காரணமும் இல்லை. முந்தைய நிர்வாகங்களை விட இந்த விடயத்தை மிகவும் திறம்பட கையாள வாய்ப்பு உள்ளது.
அரசாங்கம் விசாரணைகளை முறையாக நடத்தி நீதி வழங்கும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம், ஆனால் செயல்முறை மெதுவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
