ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு பொறிமுறை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை, சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 60வது அமர்வில் கலந்து கொண்ட விஜித ஹேரத், கடந்த 10ஆம் திகதி, வோல்கர் டர்க்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, வோல்கர் டர்க் சமர்ப்பித்த அறிக்கை குறித்து,விரிவாக கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட விடயங்கள் குறித்து சிறிலங்காவின் நிலைப்பாட்டை, விஜித ஹேரத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும், கடந்தகால மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகளைத் தீர்க்க, சுயாதீன விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை நாடு இழக்காது என்றும் வோல்கர் டர்க் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.