வெளிநாட்டுத் திட்டங்களுக்கு சிறப்பு பணியகங்கள் இனி இல்லை
வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான சிறப்பு பணியகங்களை நிறுவும் நடைமுறையை நிறுத்துமாறு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக மாகாண ஆளுநர்களை சிறிலங்கா அதிபர் சந்தித்துள்ளார்.
இதன்போதே, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள், பெரிய நிர்வாகச் செலவுகள் தேவைப்படும் சிறப்புத் திட்ட பணியகங்கள் மூலம் மேற்கொள்ளப்படக் கூடாது என்று மாகாண ஆளுநர்கள் மற்றும் செயலாளர்களுக்கு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மாறாக, அவை தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டு, மக்களுக்கு நேரடியாக நன்மைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.