பாதாள உலக குழுவுக்கு ரவைகளை விற்ற இராணுவ அதிகாரி கைது
பாதாள உலக கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த முல்லைத்தீவு மல்லாவி, பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கொமாண்டோ சலிந்த என்ற பாதாள உலக குழு தலைவனுக்கு, 260 ரி56 துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்தார் என அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இரண்டு தடவைகளில், 200 மற்றும் 60 ரவைகள் தனித்தனியாக 650,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறித்த இராணுவ அதிகாரி 2017ஆம் ஆண்டு கணேமுல்லவில் உள்ள கொமாண்டோ ரெஜிமென்ட் தலைமையகத்தில் பணியாற்றிய போது, இந்த ரவைகள் வழங்கப்பட்டுள்ளன.
அப்போது கொமாண்டோ சலிந்த, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் தர அதிகாரியின் கீழ் பணியாற்றியுள்ளார்.
பின்னர் ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ், இந்த அதிகாரி இலகு காலாட்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட லெப்.கேணல் அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, பாலிநகரில் சிறிலங்கா இராணுவத்தின் 10 ஆவது இலகு காலாட்படை பற்றாலியன் நிலை கொண்டிருப்பதுடன் அதன் கட்டளை அதிகாரியாக, லெப். கேணல் டிஎன்ரி டி சொய்சா பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.