செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்- 240 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வுக்கு நீதிமன்றத்தினால், 45 நாட்கள் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆரம்பத்தில் 13 மீற்றர் நீளமும் 11மீற்றர் அகலம் கொண்ட தடயவியல் அகழ்வாய்வுத்தளம் 1 இல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் 23.4 மீற்றர் நீளமும் 11.2 மீற்றர் அகலமும் கொண்டதாக அகழ்வாய்வுத் தளம் விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு 45 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரையான அகழ்வுகளின் போது, 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குவியல்களாக காணப்பட்ட 14 மனித எச்ச குவியல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவிடம் ஆய்வுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, செம்மணிப் புதைகுழியை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனைகளின் அடிப்படையில், மேலும் 8 வாரங்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ். நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் படி, அகழ்வுப்பணிக்கான வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தினால் அதற்குரிய நிதியை பெற்றுக் கொள்ளும் வரை, அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழி வழக்கு வரும் 18ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பகிரங்கமாக அழைக்கப்படும் போது வரவுசெலவுத் திட்டம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.