மேலும்

சிறிலங்கா இராணுவ தொண்டர் படைக்குள் குழப்பம்

சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் பிரதி தளபதி பதவி ஒரு மாதமாக வெற்றிடமாக உள்ள நிலையில், உள்ளக குழப்பங்கள் தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரல் ஜனித் பண்டார ஜூலை 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற பின்னர், சிறிலங்கா இராணுவத் தொண்டர் படையின் பிரதி தளபதி பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல், ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிடமாக உள்ளது.

இது அதன் நிர்வாக செயற்பாடுகளை கையாள்வது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஒரு பதில் பிரதி தளபதி நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

இது வழக்கமாக ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே நடைமுறையில் இருக்கும்.

இருப்பினும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, எந்தவொரு நியமனத்தையும் செய்யத் தவறியது வழக்கமான நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளது.

பிரதித் தளபதியே, தொண்டர் படையின் அன்றாட செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்பானவராக உள்ளார்.

இந்த தாமதம் மூத்த அதிகாரிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

போர் அனுபவமுள்ள தொண்டர்படையின் மூத்த அதிகாரியான பிரிகேடியர் பந்துல லெகம்கே, தற்போது அடுத்த இடத்தில் உள்ளார், அவர், 2025 நொவம்பரில் ஓய்வு பெறவுள்ளார்.

அவர் பணி மூப்பு நிலையில் இருந்த போதிலும், 1985 ஆம் ஆண்டு தொண்டர் படை விதிமுறைகளுக்கு மாறாக, பணி மூப்பு பட்டியலில் கீழ் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டில் ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்த பின்னர்,  சம்பந்தப்பட்ட அதிகாரி தனது பணி மூப்பை இழந்தார்.

அவரது பணி மூப்பு நிலையை மீட்டெடுப்பது குறித்து இராணுவத் தலைமையகம், சட்டமா அதிபரிடம்  சட்ட ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சட்டமா அதிபர் அதை நிராகரித்து, 47 அதிகாரிகள் இதேபோல் தங்கள் பதவிகளை இழந்துள்ளதாகவும், ஒரு அதிகாரியின் பணி மூப்பு நிலையை மீட்டெடுப்பது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அந்த நியமனம் முட்டுக்கட்டையாக உள்ள நிலையில், பிரதி தளபதி இல்லாதது இராணுவ  தொண்டர்படையில், குழப்பங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *