அமெரிக்க அழுத்தங்களால் சீனாவின் அழைப்பை நிராகரித்த சிறிலங்கா
சீனாவின் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சீனா விடுத்த அழைப்பை சிறிலங்கா நிராகரித்ததாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகம் மற்றும் பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆகியன, இந்த உச்சிமாநாட்டில், பங்கேற்க வலியுறுத்திய போதிலும், வெளிநாட்டு தூதரகத்தின் அழுத்தங்களால், அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், சிறிலங்கா அரசாங்கம் அமைதியாகவும், உறுதியற்றதாகவும் இருந்தது என்றும், இறுதியில் உச்சிமாநாட்டிலிருந்து விலகி இருக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
உச்சி மாநாட்டிற்கு முன்னரும் பின்னரும், சிறிலங்காவின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக சீனா உதவிகளை வழங்க முன்வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், சிறிலங்காவின் முடிவு பரந்த புவிசார் அரசியல் பரிசீலனைகளையும், தீவிரமடைந்து வரும் உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் நடுநிலையைப் பேணுவதற்கான விருப்பத்தையும் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பின்இந்த முடிவு பெரிய சக்திகளுக்கு இடையிலான உறவுகளை சமநிலைப்படுத்துவதில் அதன் எச்சரிக்கையைக் குறிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதாகவும் சிறிலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
