நம்பிக்கையில்லா பிரேரணையை தட்டிக்கழிக்க அரசாங்கம் முயற்சி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் செல்லுபடித்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியுமா என்பதை எதிர்க்கட்சி தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்த எதிர்க்கட்சியின் முதல் கடமை, நாடாளுமன்ற மரபுகளின்படி அதை சமர்ப்பிப்பதாகும்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் நிறைய முன்னேறியுள்ளன.
கடந்த நாடாளுமன்ற அமர்வில் கூறப்பட்டதைத் தவிர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாங்கள் நிறைய சொல்ல முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி சமர்ப்பித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, தனது முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.
