உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தும் வோல்கர் டர்க்கின் அறிக்கை
பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்த குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
நீதி வழங்குதல், சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது மற்றும் பாகுபாடு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை அகற்றுவது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழிகள், இறுதியான- உறுதியான முடிவுகளைத் தர வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் வோல்கர் டர்க் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று, சிறிலங்கா கடந்த காலத்திலிருந்து விலகுவதற்கான ஒரு வாய்ப்பு உருவாகிறது.இந்த உறுதிமொழிகளை முடிவுகளாக மொழிபெயர்க்க இப்போது ஒரு விரிவான பாதை வரைபடம் தேவை.என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டுப் போரின் போது உட்பட – செய்யப்பட்ட மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தெளிவாக ஒப்புக்கொள்ளவும், அரசின் பொறுப்பையும் அதன் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட அரசு சாரா ஆயுதக் குழுக்களின் பொறுப்பையும் அங்கீகரிக்கவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களின் வலி மற்றும் துன்பம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது, மேலும் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும், என்றும் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் மற்றும் பரந்த அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவன மாற்றங்களை அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
சுயாதீனமான பொது சட்டவாளர் அலுவலகத்தின் திட்டமிடப்பட்ட உருவாக்கத்தை இது வரவேற்கிறது.
கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள ஒரு சுயாதீனமான சிறப்பு சட்டவாளர் உட்பட ஒரு அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதையும் இது வலியுறுத்துகிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் -உள்ளிட்ட பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
தரவு மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பானவை உட்பட, பல கட்டுப்பாட்டுச் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய அல்லது ரத்து செய்ய அறிக்கை மேலும் அழைப்பு விடுத்துள்ளது.
குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடருவதற்கான முதன்மை பொறுப்பு அரசாங்கத்திடம் இருந்தாலும், அந்த அறிக்கையில், சர்வதேச ஆதரவை கோருகிறது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்களிக்கவும், தொடர்புடைய பணிகளை மேற்கொள்வதற்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனைப் பயன்படுத்தவும் ஐ.நா. உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ‘தேசிய ஒற்றுமை’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானவை” என்று வோல்கர் டர்க் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.