முன்னாள் கடற்படைத் தளபதி குறித்த விசாரணைகளை தடுக்க முயற்சி
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர் அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுதகுறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனது தொடர்பான, கடத்தல் சம்பவத்துடன் இந்த கைது தொடர்புடையது.
இந்த வழக்குக்கும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதற்கும் இடையிலான சாத்தியமான தொடர்புகள் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந்தக் கடத்தல்களை மேற்கொள்வதில் சிறிலங்கா கடற்படைக்குள் செயற்படும் ஒரு குழுவின் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் கைதுகளை விமர்சித்து வருவதுடன், நீதித்துறை நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சிக்கிறார்.
இந்தக் கைதுகள், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அமைந்தவை என்று, இனப் பதற்றங்களைத் தூண்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.