அட்மிரல் உலுகத்தென்னவுக்கு பிணை – சிஐடி பணிப்பாளருக்கு நீதிபதி கண்டனம்
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், கியூபாவுக்கான முன்னாள் தூதுவருமான அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை பிணையில் விடுவித்துள்ள குருநாகல மேல்நீதிமன்றம், இந்த கைது விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
அளவ்வவில் இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக – அப்போது கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு ஜூலை 28ஆம் திகதி கைது செய்தது.
தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு குருநாகல நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்த நிலையில் அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன குருநாகல மேல்நீதிமன்றில் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போது, இந்த கைது விடயத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பின்பற்றவில்லை என்று நீதிபதி திகிரி ஜெயதிலக குற்றம்சாட்டினார்.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகத்தென்னவைக் கைது செய்ததில் குற்றப் புலனாய்வுப் பிரிவு செயற்பட்ட விதம் குறைபாடுடையது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு காவல்துறை அதிகாரியிடமிருந்து இதுபோன்ற சட்டவிரோத செயற்முறைகளை எதிர்பார்க்கவில்லை என்றும் நீதிபதி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அட்மிரல் உலுகத்தென்னவை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.