மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சிறிலங்காவுக்கு கடும் நிபந்தனைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா கடும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 24 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை தற்போது உள்வாங்கிக் கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தில்,  தனது ஏற்றுமதி சந்தையைத் தக்கவைத்து விரிவுபடுத்த சிறிலங்காவினால் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது.

2027 க்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட அளவுகோல்களின் கீழ், ஜிஎஸ்பி பிளஸ் ( GSP+) வர்த்தக வசதியை நீடிப்பதற்காக சிறிலங்கா தற்போது ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் மதிப்பிடப்படுகிறது.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, ஏற்கனவே ஒப்புதல் அளித்த 27 அனைத்துலக பிரகடனங்ளை செயற்படுத்துவதில் சிறிலங்காவின் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த பிரகடனங்களை  செயற்படுத்துவதாக உறுதியளித்து,  2010 இல் இடைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வசதியை சிறிலங்கா 2017 இல் மீண்டும் பெற்றது.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கட்டமைப்பின் கீழ் இந்த வசதிக்கு மீண்டும் விண்ணப்பிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

ஜிஎஸ்பி பிளஸ் என்பது நிலையான வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான ஒரு சிறப்பு ஊக்க ஏற்பாடாகும்.

இது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 அனைத்துலக பிரகடனங்களை அங்கீகரித்துள்ள- பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளுக்கு உதவுகிறது.

தற்போதைய பிரகடனங்களுக்கு மேலதிகமாக, இதனைப் பெற விரும்பும் நாடுகள் இப்போது மேலும் பலவற்றை அங்கீகரித்து செயற்படுத்த வேண்டும்.

அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு மாநாடு எண். 144 (முத்தரப்பு ஆலோசனைகளில்), அனைத்துலக தொழிலாளர் அமைப்பு மாநாடு எண். 81, ஆயுத மோதலில் குழந்தைகளின் ஈடுபாடு குறித்த குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டிற்கான விருப்ப நெறிமுறை மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மாநாடு ஆகியவை அடங்கும்.

இந்த பிரகடனங்களில் பெரும்பாலானவற்றை செயற்படுத்துவதில் சிறிலங்கா பெரிய சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இருப்பினும், ஒட்டுமொத்த செயற்பாட்டில் அரசாங்கம் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிக்க வேண்டும்.

குறிப்பாக, தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக, அனைத்துலக தரநிலைகளை பூர்த்தி செய்யும் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது அழுத்தத்தில் உள்ளது.

இது தொடர்பாக முந்தைய அரசாங்கம் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வரைந்தது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியது.

தற்போதைய அரசாங்கம் அந்த சட்டமூலத்தை இயற்றுவதைத் தொடரவில்லை; அதற்கு பதிலாக, புதிய ஒன்றை மறுபரிசீலனை செய்து வரைவு செய்ய முடிவு செய்தது.

இதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே முன்மொழியப்பட்ட சட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய பரிந்துரைகளுடன் ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது.

இருப்பினும் அண்மைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர், அவ்வாறு செய்வதாக முன்னர் வாக்குறுதிகள் கொடுத்த போதிலும், அரசாங்கம் இன்னும் புதிய சட்டமூலத்தை இறுதி செய்து வர்த்தமானியில் வெளியிடவில்லை.

தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு புதிய சட்டத்துடன் அதை மாற்றுவது, திருத்தப்பட்ட அளவுகோல்களின் கீழ் ஜிஎஸ்பி பிளஸ் வசதிக்கு மீண்டும் விண்ணப்பிப்பதில் அரசாங்கத்தின் முக்கிய பணியாக உள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகை என்பது அரசாங்கத்தால் இழக்க முடியாத ஒன்றாகும்.

குறிப்பாக அமெரிக்க வரிகளை அடுத்து, அதிகாரபூர்வ  புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி 3.7 பில்லியன் யூரோக்களாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளால் பயனடைகின்றன.

சிறிலங்கா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் 1.5 பில்லியன் யூரோ வர்த்தக நிலுவையை அனுபவித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் உறவு விரோதமானது அல்ல.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அண்மைய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத்  தீர்மானம், இந்த முறை குறிப்பிடத்தக்க வகையில் கனதி குறைக்கப்பட்டது,  சிறிலங்கா அரசாங்கத்திற்கு சிறிது நிம்மதியை அளித்தது.

மேலும், வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எதிர்க்கவில்லை.

இந்தப் பின்னணியில், அடுத்த தவணைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வசதியைப் பெறுவதற்கு அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கமாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *