கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு
இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்ட அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை நேற்று வரை விளக்கமறியலில் வைக்க, பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளக்கமறியல் உத்தரவு காலாவதியான நிலையில் நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலேயே, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன கைது செய்யப்பட்டார்.
நேற்று அவரை அடையாள அணிவகுப்பில் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது,
எனினும், தனது வாடிக்கையாளரின் முக்கியத்துவம் மற்றும் பொது நபராக அவர் அங்கீகரிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய நடைமுறை தேவையற்றது என்று உலுகத்தென்னவின் சட்டவாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 2010 ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட பொத்துஹெரவைச் சேர்ந்த சாந்த சமரவீர என்ற இளைஞன், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டார் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகளால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பாக, நடத்தப்பட்டு வரும் விசாரணையின் போது, கடற்படைத் தளத்திற்குள் உள்ள ஒரு சுவரில், சுருட்டி வைக்கப்பட்டிருந்த சமரவீரவின் கையால் எழுதப்பட்டதாக நம்பப்படும் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அதை அடுத்தே, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.