மேலும்

மற்றைய மனிதப் புதைகுழிகளிலிருந்து செம்மணி ஏன் மாறுபட்டது?

இதுவரைக்கும் வடக்கில் பன்னிரெண்டு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மிக அண்மையில் மன்னார் சதொச கட்டட வளாகத்திலும், கொக்குத்தொடுவாய் கிராமத்திலும் மனிதப் புதைகுழிகள் அபிவிருத்திப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விரு மனிதப் புதைகுழிகளின் அகழ்வின் முடிவிலும், சதொச கட்டட மனிதப் புதைகுழிக்கு மத ரீதியான அர்த்தப்படுத்தலும், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புபட்ட அர்த்தப்படுத்தலும் காண்பிக்கப்பட்டது.

இந்த அர்த்தப்படுத்தல்களோடு, மேற்குறித்த இரு மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்புகள் மறைந்து போயின.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருபவர்கள், தமிழ் இன அழிப்பிற்கு ஆதாரங்களைத் திரட்டுபவர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புக்களும் பயனற்றுப் போயின.

இப்போது அகழப்பட்டு வரும் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வேறுமாதிரியானது

1. மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகளில் அதிகமானவை சிறுவர்களினுடையவை என சந்தேகிக்கத்தக்கன.

எவ்விதமான பகுப்பாய்வுக்கிற்கும் உட்படுத்தாமலே, அந்த எலும்புக்கூடுகளைப் பார்த்தவுடனேயே இவை சிறுவர்களுடையவை என்கிற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவன.

ஆகவே இவை ஆயுதம் தாங்கியவர்களினுடையவை என்ற முடிவுக்கு யாராலும் வரமுடியவில்லை.

குரூரமான குற்றச்செயல் ஒன்றின் பின்னர் அவசரஅவசரமாக குழிகள் வெட்டி புதைக்குப்பட்டுள்ளனர் என்கிற முடிவுக்கே வரமுடிகின்றது.

ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யக்கூடியவர்கள் என வரையறைசெய்யப்படும் சிறுவர்களையே கொன்று புதைத்திருக்கின்றனர்.

எனவே இவ்விடத்தில் அவ்வினத்தின் அடுத்த தலைமுறை உற்பத்தியானது அழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இன உற்பத்தியை தரக்கூடிய தரப்பினரையே கூட்டாக அழிப்பது இனவழிப்புத்தானே.

ஆகவேதான் செம்மணியின் சித்துப்பாத்தி தமிழ் இன அழிப்பின் முதற்தர ஆதாரமாகக் கொள்ளத்தக்கது.

2. இங்கு மீட்கப்பட்டுவரும் சிறுவர்களினுடையவை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகளோடு இணைந்தவகையில் அகழ்தெடுக்கப்படும் பொருட்கள் சாதாரணர்களின் மனங்களை நெகிழச்செய்பவை.உறக்கத்தைத் துரத்துபவை.

புத்தகப்பையை ஒத்திருக்கும் பை, பொம்மை, வளையல், செருப்பு, போச்சிப்போத்தல், குழந்தையை கட்டியணைத்தபடி இருக்கும் பெரிய எலும்புக்கூட்டுத்தொகுதி போன்றன அங்கு இடம்பெற்றிருக்கும் குற்றச்செயலின் குரூரத்தைச் சாட்சிப்படுத்துகின்றன.

மனச்சாட்சியுள்ள எத்தகைய மனிதரையும் இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரச்செய்வன.

ஆகவே செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியானது தமிழர்களின் மீது நிகழத்தப்பட்ட இனஅழிப்புக்கான நீதிக்கோரிக்கையை நியாயப்படுத்தவும், சர்வதேச மயப்படுத்தவும் கூடிய கதவொன்றைத் திறந்திருக்கிறது.

3. சிறுவர்களினுடையவை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகளுடன், பெரியவர்களினது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவது, குழந்தையை அணைத்தபடி பெரிய எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்படுவது போன்ற சம்பவங்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் குடும்பம் குடும்பமாகவும் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனவல்லவா?

வேறொருவரின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, யாரும் குரூரமான மரணப்படுக்கையில் கிடப்பதில்லைத்தானே. ஒரு தொகுதி மக்களை குடும்பம் குடும்பமாக அழிப்பதும்கூட இனவழிப்பாகக் கொள்ளத்தக்கதல்லவா?

4. தமிழர்களின் ஏகோபித்த நம்பிக்கையாக இருக்கின்ற சர்வதேச சமூகம், மியன்மாரிலும், சிரியாவிலும், காஸாவிலும்தான் இனவழிப்பு நடந்துகொண்டிருக்கிறது எனத் தம் பார்வையை அந்த நாடுகளின் பக்கம் திருப்பிக்கொண்டிருக்க, செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆன்மாக்கள் நிலம்பிளந்து நீதி கோருகின்றன.

மேற்குறித்த நாடுகளின் இனஅழிப்புக்கெல்லாம் மூத்த இனஅழிப்புக்கு சாட்சியமாக நாமே கிடக்கிறோம். வந்து பாருங்கள். நீதி தாருங்கள் என நாளாந்தம் நீதிக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன.

எனவே இந்த அவலத்தை விளங்கிக் கொண்டாவது, நம்மவர்கள் காரியமாற்ற வேண்டும்.

-ஜெரா தம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *