சிறிலங்காவின் உயர் படைத்தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு
பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆமிர் ரசா (Syed Aamer Raza) சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று கொழும்பு வந்துள்ள அவர், உயர்மட்ட பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழுவுடன் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்றிகோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு, பாரம்பரிய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் அளிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பிராந்திய பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.
கூட்டு இராணுவ பயிற்சித் திட்டங்கள், புலனாய்வுத் தகவல் பகிர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆமிர் ரசா இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.