சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
சிறிலங்கா கடற்படையின் ஆறு நாள் “திருகோணமலை கடல் பயிற்சி 2025” (TRINEX – 25), நாளை ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து, கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சி, ஒருங்கிணைந்த செயற்பாடு மற்றும் போர் தயார்நிலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையை கடல் வலிமை மற்றும் துல்லியமான கூட்டு நடவடிக்கையின் மூலம், ஒன்றிணைக்கும்.
சிறிலங்கா கடற்படை கப்பல்கள் கடல் சூழலில் செயற்பாட்டு சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்கால உள்ளூர்/சர்வதேச கடற்படை பயிற்சிகளில் பங்கேற்கும்போது, கப்பல் மூலம் செல்லும் நடவடிக்கைகளின் எதிர்பார்க்கப்படும் தரத்தை அடையவும், தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் கப்பல்கள் அணி, சிறப்பு படகுப் படையணி, சிறிலங்கா மரைன் படையணி, சீனக்குடாவில் உள்ள 3 வது கடல்சார் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த விமானங்கள் உள்ளிட்ட சிறிலங்கா விமானப்படையின் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.
திருகோணமலைக் குடா மற்றும் கிழக்கு கரையோரத்தை மையப்படுத்தி இந்தக் கடற்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு சவால்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்தப் பயிற்சி இடம்பெறுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.