சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்த காலத்தில் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர வகித்த பதவி மற்றும் புதிய அரசாங்கத்தில் அவர் பெற்றுள்ள அரசியல் நியமனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குண்டுவெடிப்புகள் குறித்த எந்தவொரு விசாரணையும் பாரபட்சமற்றதாக இருக்கும் என கருத முடியாது.
அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளில், அரச புலனாய்வுப் பிரிவில் உள்ள சிலர் தாக்குதல்களில் தொடர்புபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.
“தாக்குதல்கள் நடந்தபோது அருண ஜயசேகர சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக இருந்தார்.
என்ன நடந்தது என்பதையும், மரபணுச் சோதனை மூலம் ‘இறக்கவில்லை’ என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள சாரா ஜஸ்மின் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் தப்பிக்க உதவியவர் யார் என்பதையும், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள குழுவின் தலைவரான சஹ்ரான் காசிமின் மனைவி பாத்திமா ஹாடியாவின் அறிக்கையையும், அவர் அறிந்திருக்க வேண்டும்.
தொடர்புடையவர்கள் ஏன் இன்னும் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை?
முந்தைய ஆட்சியின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் அதிகாரப் பதவியில் தொடர்ந்து இருப்பது, தற்போது சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைச்சை நிர்வகித்து வருவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் முயற்சிகளின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை பதவி விலகச் செய்யச் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தார்.
ஆனால் குண்டுவெடிப்புகளின் போது இராணுவ கட்டளை பதவியை வகித்த ஒருவர், இப்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக ஏன் பணியாற்றுகிறார் என்று நாம் கேட்கலாம்.
அவர்களின் மேலதிகாரி சம்பந்தப்பட்டிருக்கும் போது, எந்த பொது அதிகாரியும் முறையான விசாரணையை நடத்த மாட்டார்கள் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.