செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால், இன்று பிற்பகல் 3 மணியளவில், போராட்டம் ஆரம்பமானது
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பு இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலை பலப்படுத்துவோம், ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை உலகிற்கு கூறுவோம், சர்வதேச தரத்திலான அகழ்வு பணி மட்டுமல்ல, நீதிக்கான சர்வதேசத்தின் தலையீட்டையும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கி குரல் எழுப்புவோம் என தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா? செம்மணியில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் பட்டலந்த வதைமுகாம் குறித்த விசாரணைகளை வலியுறுத்தும் பதாதைகளும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முயன்ற வேளை சிறிலங்கா காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அரசியல் செயற்பாட்டாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
படங்கள் நன்றியுடன்- டெய்லி மிரர்.