மேலும்

ட்ரம்ப் வரிக்கு பதிலடி வரி விதிக்குமா சிறிலங்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரிக்கு எதிராக பதிலடி வரியை சிறிலங்கா விதிக்காது என, சிறிலங்கா அதிபரின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதிகளுக்கு புதிதாக முன்மொழியப்பட்ட 30 வீத வரி ஒரு நிலையான வீதம் அல்ல.

தற்போதுள்ள இறக்குமதி வரிகளுக்கு மேலதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள  கூடுதல் வரியாகும்.

30வீத  வரி, தயாரிப்புகளின் ஹார்மோனைஸ்ட் முறைமைக் (HS) குறியீடுகளைப் பொறுத்து 0  முதல் 25 சதவீதம் வரை மாறுபடும்.

தற்போது, ​​HS குறியீடுகளின் கீழ் உள்ள ஆடைகளுக்கு 0 வீதம் முதல் 25 வீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

மிகவும் பிரபலமான பொருட்களுக்கான வரி வீதம் பொதுவாக 3.5 வீதம் முதல் 13 வீதம் வரை இருக்கும்.

புதிய 30 வீதம் என்பது ஏற்கனவே உள்ள வரிக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒரு பரஸ்பர வரியாகும்.

ஒரு ஆடைக்கு தற்போது 10 வீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறதென்றால்,  புதிய வரி 10 வீதம் + 30 வீதம் = 40 வீதம் ஆக இருக்கும்.

இது சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, புதிய அமெரிக்க வரி திருத்தத்தின் கீழ் உள்ள பல நாடுகளுக்கும் பொருந்தும்.

சிறிலங்காவின் ஆடை மற்றும் அமெரிக்க சந்தையில் ஆடை ஏற்றுமதியில் மிகப்பெரிய போட்டியாக  இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் உள்ளன.

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதி 3 பில்லியன் டொலருக்கம் அதிகமாகும், அதில், 1.2 பில்லியன்  டொலர் ஆடைகளிலிருந்து மட்டுமே வருகிறது.

சிறிலங்காவின் ஆடைகள் ஒரு சிறப்புப் பிரிவிற்குள் வருகின்றன.

இருப்பினும், அந்த நாடுகளிடமிருந்து நாங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறோம்.

அதனால்தான், அமெரிக்க சந்தையில் எங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது.என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *