மேலும்

65 எலும்புக்கூடுகள் மீட்பு- செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் நேற்று மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் ஜூலை  21ஆம் திகதி முதல்  அகழ்வு பணிகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்றைய அகழ்வுப் பணியின் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வுத்தளம் – 01   மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  தடயவியல் அகழ்வாய்வுத்தளம் – 02  புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

தடயவியல் அகழ்வாய்வுத்தளம்- 02  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *