சிறிலங்காவுக்கு 30 வீத வரி – எச்சரிக்கையையும் விடுத்தார் ட்ரம்ப்
சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரண்டாவது கட்டமாக சிறிலங்கா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான வரி மீளாய்வு அறிவிப்பை ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த, 44 சதவீத வரி, தற்போது, 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், 30 சதவீத வரி, எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் அறவிடப்படும் என்றும் ட்ரம்ப், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
பரிமாற்றங்கள் மூலம் இந்த வரிகளை தவிர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டால், அதிக அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா நிறுவனங்கள் அமெரிக்காவிற்குள் பொருட்களை உற்பத்தி செய்யத் தேர்வு செய்தால், சிறிலங்கா இந்த கட்டணங்களைத் தவிர்க்கலாம் என்றும், ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா தனது வரிகளை உயர்த்துவதன் மூலம் பதிலடி கொடுத்தால், அமெரிக்கா 30 சதவீத வரியை அதற்கு சமமான தொகையால் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளைப் பொறுத்து வரிகளை “மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி” சரி செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பியுள்ள கடிதத்தில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அருணகுமார திசாநாயக்க என்று குறிப்பிடப்பட்டுள்ளது.