சுயாதீன விசாரணைக்கு சர்வதேச பங்களிப்பு – அரசாங்கம் நிராகரிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிறப்பு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவும் திட்டத்தை செயல்படுத்துவதில் சில சட்டத் தடைகள் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால், முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகத்தை நிறுவும், யோசனை குறித்து ஆராய அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் படி அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சட்டமா அதிபர் பணியகத்திற்கும், சட்டமா அதிபர் அரசாங்கத்தின் ஆலோசகராக இருப்பதற்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது.
இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், சட்டமா அதிபர் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று அர்த்தமல்ல.
சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் பணியகம் மீது அரசாங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த மோதலைத் தவிர்க்க அரசாங்கம் தனது பணிகளை விரைவுபடுத்தி வருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த அரசாங்கம் இந்த சிறப்பு சுயாதீன வழக்குத் தொடுநர் பணியகத்தை நிச்சயமாக நிறுவும்.
மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் நிச்சயமாக கைது செய்யப்பட்டு நீதி அமைப்பு மூலம் அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சிறப்பு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை அமைப்பதற்கு சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என, விடுத்த கோரிக்கையையும் நீதியமைச்சர் நிராகரித்துள்ளார்.
இதற்குச் சர்வதேச உதவிகளைப் பெற முடியும் என்றாலும், குற்றப் புலனாய்வுத்துறை, நாட்டின் சட்ட அமைப்பின் நீதிபதிகளுடன் சேர்ந்து சுயாதீனமான பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்தும் திறன் கொண்டதாக இருப்பதால், அது தேவையில்லை என்றும் அவர் கூறினார்.