சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா?
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்ததாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல மரபணுச் சோதனைகள் வெற்றியளிக்கவில்லை.
2019 ஏப்ரல் 24, ஆம் திகதி நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் அவர் இறந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அவரது மரணத்தை உறுதிப்படுத்த இரண்டு முறை மரபணுச் சோதனை அறிக்கை கோரப்பட்டது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவரது நெருங்கிய உறவினர்களின் மரபணு மாதிரிகளுடன் பொருந்தவில்லை.
அவரது தாயாரின் மாதிரியை உள்ளடக்கிய மூன்றாவது மரபணுச் சோதனை, பொதுப் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர இருந்த காலத்தில் நடத்தப்பட்டது.
அதற்கான மாதிரிகள் பெறப்பட்ட விதம் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதுபற்றி அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
சாரா ஜஸ்மின் குண்டுவெடிப்பில் அல்ல, அமிலத் தாக்குதலால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் உட்பட, அவரது மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தற்கொலை குண்டுவெடிப்புகள் குறித்து பிள்ளையானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நேரத்தில் பிள்ளையானுக்கு புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பு இருந்தது. நடந்து வரும் விசாரணைகள் காரணமாக இதுபற்றிய மேலதிக விபரங்களை வெளியிட முடியாது.“ என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.