ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
எனினும் அந்த தாக்குதல்கள் நடக்கப் போவதை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்.அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்றும் சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ராஜபக்சவினர், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக, தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக அமைச்சரும், அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை ஒரு தனித்த ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே அரசியல் பிளவை உருவாக்குவதன் மூலம், அவர்கள் இதை அடைய முயற்சித்தனர்.
அதற்காக அவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தினர், ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆணை மிகவும் வலுவானதாக இருந்ததால் அது போதுமானதாக இருக்கவில்லை.
ராஜபக்சக்கள் ஒரு புறச் சூழ்நிலையை உருவாக்கினர். புலனாய்வு அமைப்புகள் மூலம் சிங்கள மற்றும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களை உருவாக்கி, பராமரிக்கும் வேலையை அவர்கள் 2013 இல் தொடங்கினர்.
இதன் உச்சக்கட்டம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சம்பவத்தைப் போன்றது,” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.