பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், பிள்ளையானின் நெருங்கிய சகாவுமான, இனியபாரதி எனப்படும், கந்தசாமி புஸ்பகுமார் திருக்கோவிலில் வைத்தும், மற்றொரு சந்தேக நபரான சிவலிங்கம் தவசீலன், மட்டக்களப்பிலும் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, பிள்ளையானின் மற்றொரு சகா, கல்முனையில் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2007-2008 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற, கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கப்பம் பெறுதல், வதைமுகாம்களை நடத்தியமை, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற, தீவிரமான குற்றங்களில் ஈடுபட்ட ஆயுதக் குழு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் தொடர்ச்சியாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
