அணுசக்தி கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் இயங்கத் தொடங்கின
சிறிலங்கா கடற்படை தளங்களில் அண்மையில் நிறுவப்பட்ட ஐந்து அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவிகளில் இருந்து, தரவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின், ஆய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவின்பணிப்பாளர், பிரகீத் கடடுன்ன,
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆதரவுடன் கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, நிலாவெளி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்களில், இந்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் அணுசக்தி நிலையங்கள் இயங்கா விட்டாலும், அண்டை நாடான இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களிலிருந்து ஏற்படக்கூடிய கதிர்வீச்சு கசிவுகள் தொடர்பாக முன்கூட்டியே கண்டறிந்து, தயார்நிலையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருவிகளில் இருந்து தற்போது தரவுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சிறிலங்காவுக்குள் எதிர்காலத்தில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.