சிறிலங்கா வராமல் திரும்பும் சீன ஆய்வுக்கப்பல்
இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின் டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர் நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 1ஆம் திகதி சீனாவின் குவாங்டொங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், மலாக்கா நீரிணை வழியாக வங்காள விரிகுடாவுக்குள் நுழைந்தது.
அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்த போது, சீன ஆய்வுக் கப்பல் உளவுப் பணிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1984 ஆம் அண்டு உக்ரைனில் கட்டப்பட்டு 1994 இல் சீனாவினால் வாங்கப்பட்ட, டா யாங் யி ஹாவோ கப்பல், சீனப் பெருங்கடல் கனிம வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்கத்துக்கு (COMRA) சொந்தமானது.
104 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில், கடல் தளத்தை வரைபடமாக்கும், ஏவுகணை சோதனைகளைக் கண்காணிக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும், மேம்பட்ட இமேஜிங் மற்றும் மாதிரி அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்தக் கப்பல் தற்போது மலாக்கா நீரிணை வழியாக சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கப்பல்களின் பயணங்களை கண்டறியும் தளங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் அனுமதிக்கப்படாததால், சீன ஆய்வுக்கப்பல் வங்காள விரிகுடாவில் கண்காணிப்பை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.