கருணா, பிள்ளையானின் நெருங்கிய சகா இனியபாரதி கைது
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை-திருக்கோவில் முனியகாடு என்ற இடத்தில் வீடு ஒன்றில் மறைந்திருந்த போது இன்று அதிகாலை 5.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.
2006ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற ஆட்கடத்தல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனியபாரதியைக் கைது செய்துள்ளனர்.
கருணா குழுவின் அம்பாறை, பொத்துவில் பகுதி பொறுப்பாளராக இருந்த இனியபாரதி, பின்னர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு படுகொலையுடன் தொடர்புடையவர் என்றும், பல இளைஞர், யுவதிகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இனியபாரதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தவர்.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்த இயங்கிய இவருக்கு மகிந்த ராஜபக்சவினால் சிறிலங்காவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உயர் விருதான தேசமான்ய விருதும் வழங்கப்பட்டது.