மேலும்

கோத்தா உள்ளிட்ட 6 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரையில் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் சார்பாக, தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் தொடக்கம், வேட்பாளர்களிடம் இருந்து கட்டுப்பணத்தை பெறும் நடவடிக்கைகளை தேர்தல்கள் செயலகம் ஆரம்பித்துள்ளது.

நேற்று முன்தினம் முதலாவது நாள், மூன்று வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.

சோசலிச கட்சியின் சார்பில் கலாநிதி அஜந்தா பெரேராவும், சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜயந்த கேத்தாகொட மற்றும் சிறிபால அமரசிங்க ஆகியோரும், நேற்று முன்தினம் கட்டுப்பணம் செலுத்தினர்.

நேற்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சார்பில் கட்சியின் பொதுச்செயலர் சாகர காரியவசம், கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.

நல்ல நாள் பார்த்தே கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும், எல்லாம் நன்றாக இருக்கும் என்றும், கட்டுப்பணம் செலுத்திய பின்னர் சாகர காரியவசம் கூறினார்.

மேலும், இரண்டு வேட்பாளர்கள் சார்பில் நேற்று தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

எமது மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு, வெலிசறகே சமன் பிரசன்ன பெரேராவும்,  சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட அபரக்கே புண்ணியானந்த தேரரும் நேற்று கேட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதுவரை ஆறு வேட்பாளர்கள் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *