மேலும்

5ஜி போர் – 2

அனைத்துலக உறவில் தகவல் தொழில்நுட்பம் இந்த வருடம்  பெரும் தாக்கத்தை விளைவித்து  இருக்கிறது. தொடர்ச்சியான தொழில் நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகள் மத்தியிலான தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களின் வியாபார போட்டியில் வந்து நிற்கிறது.

கடந்த காலங்களில் நான்கு தலைமுறைகளை கண்டுவிட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வலையமைப்பில், தற்போது ஐந்தாவது தலைமுறை அதிவேக-தடைகளற்ற தகவல் பரிமாற்ற வசதிகள் அமெரிக்க சீன புவிசார் அரசியலில் புதியதொரு பரிமாணத்தை தொட்டுள்ளது.

கடந்த வருட இறுதி வரையிலும் குவாயி  (Huawei ) என்ற நவீன புத்திசாலித்தனமாக இயங்கக் கூடிய கைதொலைபேசிகளை(  smart phone) தயாரிக்கும் நிறுவனம், மிகவிரைவாக உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள கைத்தொலைபேசி விற்பனையாளர்களின் வியாபார நிறுவனங்களை அலங்கரிக்க தொடங்கியது.  இதன் வளர்ச்சியும் செல்வாக்கும் அந்த கைதொலைபேசியின் விலை, அதன் விசேட வசதிகளுக்கான உட்புகுத்தல்கள், விவரங்கள் ஆகியனவற்றின் சிறப்பால் அதன் விற்பனை மிக விரைவாக அதிகரித்தது.

கைத்தொலைபேசிகள் மட்டுமல்லாது குவாயி நிறுவனம் அனைத்துலக நாடுகளின் உள்ளக தொலைத்தொடர்பு வலை கட்டமைப்பை உருவாக்கக் கூடிய  மென் பொருள், திண்பொருள் உபகரணங்களையும் தயாரித்து வழங்கல் வியாபாரத்தில் பெருவளர்ச்சி கண்டு வருகிறது.

இதனால் அண்மைய மாதங்களில் குவாயி உலகின் தொழில் நுட்ப அரக்கனாக மேலை நாடுகளால் சித்தரிக்கப்பட்டது.  மேலைத்தேய நாடுகளில் ஏற்கனவே சந்தையில்  உள்ள கைத்தொலைபேசிகளை மாத்திரம் அல்லாது தனது அதிவேக வளர்ச்சியால்  நாடுகளின் தொலைதொடர்பு வலை அமைப்புகளையே முட்டி மோதி தள்ளும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

குவாயி அனைத்துலக தொலைத்தொடர்பு வர்த்தகத்தில்  மிகவும் பிரயாசை கொண்ட நிறுவனமாக மட்டுமல்லாது, போட்டிக்கு நிற்க கூடிய மேலைத்தேய நிறுவனங்களான அப்பிள், சாம்சங் , எச்பி, ஐபிஎம் ,சிஸ்கோ இன்னும் பல நிறுவனங்களையும் தின்று விடும் திமிங்கலமாக பரிணமித்து வருகிறது.

இந்த சவால்களை எதிர் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மேலைத்தேய அனைத்துலக வல்லரசான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஆறு மாத காலமாக சீன நிறுவன வளர்ச்சியின் போக்கை தடை செய்வதற்கு வரிந்து கட்டிகொண்டு நிற்கின்றன.

இந்த நிலையில் தொலைதொடர்பு பரிணாம வளர்ச்சியில் ஐந்தாவது தலைமுறை  கட்டமைப்பை உருவாக்கும் போர்க்களம் ஒன்று தோன்றி உள்ளது. உலக நாடுகள் பலவும் தொலைத்தொடர்பின் ஐந்தாவது தலைமுறையை உலக வளர்ச்சியின் பால் கரிசனை கொண்டு ,தமது அரசியல் ஆட்சிக்குள் உட்பட்ட பிரதேசங்களில்  அமைத்து கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண உற்பத்தி நிறுவனங்களும் இந்த வளர்ச்சியை தமது வியாபாரமாக ஆக்கி கொள்வதில் முனைப்ப காட்டி வருகின்றன . இந்த வளர்ச்சியின் முன்பிருந்தே பல்வேறு இலத்திரனியல்  உபகரணங்களின் உதிரிப்பாகங்கள் ஒப்பீட்டு பொருளாதார இலாப அடிப்படையில்  சீனா, தாய்வான், தென் கொரியா பிலிப்பைன்ஸ் வியட்னாம் போன்ற நாடுகளிலேயே உற்பத்தியாவது வழக்கம்

ஆனால், அனைத்து கீழைத்தேய நாடுகளையும் விட,  சீனாவின் பல்வேறு மாகாணங்களிலேயே  மிக அதிகமான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன! அதிகமாக சீனாவில் தயாரிக்கப்படுவதில், எந்த வித பிரச்சனையும் இல்லை.

ஆனால், தயாரிக்கப்படும் பல மென் பொருட்களும் திண்பொருட்களும் அனுமதி பெற்றுக்கொள்ளாது இரகசியமாக மறுபிரதி எடுக்கப்பட்டு சில மாற்றங்களுடன் சீன பொருட்களாக குறைந்த விலையில் வெளிவருவது மேற்கு நாட்டு இலத்தரனியல் நிறுவனங்கள் பலவற்றினதும் முறைப்பாடாக இருந்து வந்தது.

இரகசிய மறுபிரதி வியாபாரத்தினால் பாதிக்கப்பட்ட மேலைத்தேய அசல் பொருட்களுக்கான  நிறுவனங்கள் தமது பாதுகாப்பு முறைகளை சீனாவில் உள்ள இலத்திரனியல் உபகரண தயாரிப்பு வேலைத்தளங்களில் அமைத்து கொண்டன.  இதன் மூலம் மேலைத்தேய தொழில் நுட்ப திறன்களும் வடிவமைப்புகளும் சீன நிறுவனங்களுக்கு செல்வதை தடுக்க முனைந்தன.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பெல்ஜியம் நாட்டில் உள்ள General Electric என்ற நிறுவனத்திலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனத்திலும் , சீன பாதுகாப்பு அமைச்சுக்கு வேலை செய்ய கூடிய ஒற்றர் ஒருவர் தொழில் நுட்ப இரகசியங்களை திருட முயன்றார் என்ற பெயரில்  அமெரிக்க உளவு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நாடுகள் கடந்தும் மேலைத்தேய தொழில்நுட்பத்தை சீன நிறுவனங்களுக்காக பலர் திருட முனைவது வெளி வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் உட்பட பல அமெரிக்க மேலைத்தேய மக்கள் தொடர்பு நிறுவனங்களும் பலத்த குற்றச்சாட்டை சீனா மீது வைத்தன.

இப்பொழுது 5 ஜி என்று அழைக்கக் கூடிய ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு  வலையமைப்பு சார்ந்த சிக்கல்கள் சீன நிறுவனமான குவாயி மீது எழுந்துள்ளது.  இந்த நிறுவனத்தின் அதீத வளர்ச்சி உதவியுடன்  உலகின் 170 நாடுகள் தமது உள்ளக தொலைதொடர்பு கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன.

200 மில்லியன் புத்திசாலித்தனமாக இயங்கக் கூடிய கைதொலைபேசிகளை  குவாயி ஏற்றுமதி செய்துள்ளது, சுமார் 1500 தொலைதொடர்பு வலை அமைப்புகளை உலகம் பூராகவும் நிறுவியதன் மூலம் உலகில் மூன்றில் ஒரு பங்கு சனதொகையை குவாயி தகவல் தொழில் நுட்பம் சென்றடைந்துள்ளது.

இந்த நிலை நாட்டில் ஆபத்துகளை உருவாக்கக்கூடிய முக்கிய மான உட்கட்டமைப்பு  தரவுகள் தொலைத்தொடர்பு வலையமைப்புகள், மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்த தரவுகள், போக்குவரத்து கட்டமைப்பு குறித்த இரகசியங்கள், நிதிச்சேவை களின் எதிர்காலத்திற்கான திட்டமிடல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு விவகார தகவல்கள் என அனைத்து விவகாரங்களையும் சீன உளவு அதிகாரிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய வகையில் மிக விரைவாக  மாற்றவோ தரவிறக்கம் செய்யவோ இயலுமான ஒரு நிலை உருவாக்கப்படுவதாக அமெரிக்க தொழில் நுட்ப உளவு அதிகாரிகளின் பார்வையில் உள்ளது.

குவாயி ஒரு சீன பதிவு நிறுவனமாகும். சீன அரசுடன் மிக இறுக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறது. இது மறுக்கமுடியாத அளவில் அதீத அபாய நிலைகளை பூகோள அரசியல் அளவிலும் உள்நாட்டு அளவிலும் அமெரிக்காவை தாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிச்சயமாக இருப்பதாக அமெரிக்க பார்வை மேலும் தெரிவிக்கிறது.

அது மாத்திரமல்லாது உலகில் சீன சார்பு நாடுகள் விளைவிக்கம் மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களை திரிபு படுத்துதல் அல்லது தடை செய்தல். போர்க்களங்களில் தகவல் பரிமாற்றங்களை இடையூறு செய்து தகவல் திரட்டுதல் என அதி அபாயமிக்க விவகாரங்களுடன், பூகோள ஆட்சித்தலைமையும் கூட,  மேலை நாடுகள் தமது கைகளை விட்டு செல்வதை உணர்கின்றன.

தனது பூகோள ஆளுமையை நிரூபிக்கும் முகமாக அமெரிக்கா ஈரானுடன் வர்த்தக தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவித்த பின்பும், சீன நிறுவனமான குவாயி ஈரானில் தொலைத்தொடர்பு சாதன வியாபாரத்தில் ஈடுபட்ட விவகாரம் குறித்தும் , ரீ மோபைல் எனப்படும் நிறுவன தொழில்நுட்ப இரகசியங்களை கையாடிய குற்றச்சாட்டின் பேரிலும், கனடாவில் இருந்த குவாயி தலைமை நிதி அலுவலர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த நிதி அலுவலர் குவாயி நிறுவன உரிமையாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குவாயி நிறுவனத்தையும் இதர சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அமெரிக்காவிலிருந்து தடை செய்யும் பணி மும்முரமாக இடம் பெற்று வருகிறது.

அதேவேளை இதர உலக  நாடுகளில் குவாயி நிறுவன தொலைதொடர்பு சாதனங்களையும் உதிரிப்பாகங்களையும் தடுப்பதோ அல்லது நான்கு வலை அமைப்புகளை வைத்திருக்கும் ஒரு நாடு, அதில் இரண்டு வலையமைப்பு மேலை நாட்டு நிறுவனங்களின் வலையமைப்பை கொண்டனவாக இருக்க வேண்டும் என்பது போன்ற புதிய நடைமுறைகளை அனைத்துலக அளவில் உருவாக்க அனைத்துலக அளவில் நடைமுறைப்படுத்த வேலைகள் இடம் பெற்ற வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளோ  ஐந்தாம் தலைமுறை வளர்ச்சியை ஆரம்பிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள போதிலும் அமெரிக்க நிர்வாகத்தினால்  குவாயி பொருட்கள் தடை செய்யப்படுவதன் மூலம் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர் கொண்டு உள்ளன.  ஐரோப்பா தனது சொந்த நலன்களையே தொழில்நுட்ப வளர்ச்சியில் நோக்குகிறது.

சீன அமெரிக்க மோதல்களில் பங்குபற்றுவதை விடுத்து பலதரப்பு நிறுவன கட்டமைப்புகள் மூலம் ஒரு நிறுவன ஆளுமையை குறைக்கும் நிலையை நோக்கி நகர்வதாக தெரிகிறது. எந்த நிறுவனங்களும் தாம் சேவை செய்யும் நாட்டின் ஆட்சி எல்லைக்குள் இருக்கும் சட்டதிட்டங்களை ஏற்று நடக்க வேண்டும் என்பது ஐரொப்பிய நாடுகளின் பார்வையாகும்.

ஐரோப்பிய சட்ட ஒழுங்கிற்கும் நம்பிக்கைக்கும் சவாலாக அமையும் நிறுவனங்கள் குறித்த விவகாரம், சீன அரசுடனான இராஜதந்திர உறவின் மூலம் வரையறை செய்து கொள்ளப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய நாடுகளின் பார்வையாகும்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வல்லரசுகளின் உறவில் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய மிகப் பாரிய நிலையை எட்டிவருகிறது. இது குறித்த சட்ட திட்டங்களை வரையறை செய்ய முடியாத அளவு மிகவேகமான மாற்றங்களை கண்டு வருவது இதன் முதலாவது சவாலாகும்.

ஐந்தாவது தலைமுறை தொலைதொடர்பு தொழில் நுட்பம் சாதாரணமாக இன்று இடம்பெறும் தொடர்பாடல் நடைமுறைகளை மாற்றம் செய்ய உள்ளது

அது மட்டுமல்லாது இன்று நாம் செய்யும் போக்குவரத்து முறைகள், சக்திவள பாவனை, விவசாயம், உற்பத்தி தொழில் சுகாதாரம், பாதுகாப்பு, ஆகிய பிரத்தியேக பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை காண உள்ளது. அதிஉச்ச வேக – தாமதம் அற்ற ஒரு உலகம், எதிர்காலத்தை உருவாக்க இருப்பதாக  இத்துறையில் ஆய்வு செய்யகூடியவர்களின் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக அரசியலில் தகவல் தொலைத்தொடர்பு வலையமைப்பு உருவாக்கி வரும் மிகப்பெரியதொரு தாக்கத்தை உள்வாங்கி கொள்ளும் வகையில் , ஆயிரக்கணக்கான  தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள், மிக இளம்வயதிலான  வலை மொழி எழுத்தாளர்கள், தமிழ் மக்கள் மத்தியில் உள்ளனர்.

அதி உச்ச வேக தொலைத்தொடர்பு  தமிழ் தேசியத்தையும்  அதன் போராட்ட வேகத்தையும் அதிகரிக்கக் கூடிய அதேவேளை, கணம் தவறாது ஒடுக்குமுறைகள் பறைசாற்றப் படும் போர்க்களம் நோக்கிய, புதிய அமைப்பு ரீதியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் எதிர்கால தேவையையே இந்த 5ஜி கோரி நிற்கிறது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *