மேலும்

அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்

சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.

அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி,  பரப்புரை  செய்யப்படும்,   தவறான தகவல்கள்  மற்றும்  தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும்,  கலந்துரையாட விரும்புகிறேன்.

அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில்  இருந்து ஆரம்பிக்கலாம்.

இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைகள் உடன்பாடு, இது இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இன்னொன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு. இது 2007இல் கையெடுத்திடப்பட்டு, 2017இல், புதுப்பிக்கப்பட்டது.  இது இராணுவ ஒத்துழைப்பை  – குறிப்பாக, கூட்டு பயிற்சிகள், இடர் மீட்பு போன்ற விடயங்களில், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது.

மூன்றாவது, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி பொதியை  உள்ளடக்கியது.

இவை தொடர்பான, சில அடிப்படை உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இராணுவ தளத்தை அமைப்பது, அல்லது சிறிலங்காவில் நிரந்தர இராணுவ இருப்பை நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதேபோல,  மிலேனியம் சவால் நிறுவனம் மூலம் அமெரிக்கா எந்த நில உரிமையைப் பெறவோ,  கட்டுப்பாட்டை பேணவோ முனையவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே  சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவையும் உதவிகளையும் வழங்கும்.

அமெரிக்க – சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது, அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தற்காலிகமாக சிறிலங்காவில் பயிற்சிகள் அல்லது  அதிகாரப்பூர்வ கடமைக்கு வரும்,  அமெரிக்க படையினர் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின்  சிவில் பணியாளர்களின் நிலையை வருகைப் படைகள் உடன்பாடு விபரிக்கிறது.

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாட்டுக்கும், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அது ஒரு இராணுவ உடன்பாடும் கிடையாது.

மிலேனியம் சவால் நிதிய கொடை, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு அபிவிருத்தி  உதவி உடன்பாடு ஆகும்.இது அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசே தவிர,  கடன் அல்ல.

இந்த உடன்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது பார்வையில், தவறான தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துகள், எமது ஜனநாயக நாடுகளின் ஒருமைப்பாடு மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

நாங்கள் பேச்சு நடத்துகின்ற வருகைப் படைகள் உடன்பாட்டில்,  பயிற்சி, ஒத்திகைகள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்களுக்கான பரஸ்வர வசதிகளை அளிக்கிறது. அதன் அர்த்தம், தளங்களை அமைப்பதோ, அமெரிக்க படையினரின் நிரந்தர பிரசன்னமோ அல்ல.

சிறிலங்கா தனது எல்லை மற்றும் பிராந்திய நீர் அல்லது வான் வெளியில் அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவு அல்லது வெளியேறுவதற்கான  ஒப்புதலை அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறைமை உரிமைகளையும் கொண்டிருக்கும்.

வருகை படைகள் உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன்  நாங்கள் இன்னமும் பேச்சு நடத்தி வருகிறோம்.

இடர் மீட்பு, கூட்டுப் பயிற்சிகள் போன்ற சூழல்களில், நடைமுறைகளை முன்கூட்டியே உருவாக்கி, வசதிகளை ஏற்படுத்தலாம். வருகைப் படைகள் உடன்பாட்டின் கீழ், எந்தவொரு படையினரும், சரியான ஆவணங்கள் இன்றியோ, முறையான அனுமதியைப் பெறாமலோ,  சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது.

பலமான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவுக்கே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கு  சிறிலங்காவின் பங்களிப்பை  நாங்கள் மதிக்கிறோம்.

சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதே, வருகை படைகள் உடன்பாடு குறித்து நாங்கள்  பேச்சு நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதற்குக் காரணம் ஆகும்.

சீனாவுக்கும் வருகை படைகள் உடன்பாட்டுக்கும்  எந்த தொடர்பும் இல்லை; இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது.

சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையீடு செய்வதாக அண்மையில் ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் வந்துள்ளன. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையிடவோ, அல்லது தலையீடு செய்யப் போவதோ அல்லது நேரடியாக ஈடுபடவோ இல்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சிறிலங்கா நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு எமது நாடு பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் நிதிமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற-  புதிய வகை குற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.

ஒரு வலுவான மற்றும் சுயாதீன நீதித்துறை, ஒரு வலுவான ஜனநாயகத்தின் தூண் ஆகும். அமெரிக்க சட்டவாளர் சங்கத்தின் கிளையை சிறிலங்காவில் அமைக்கும் நோக்கம் ஏதும் கிடையாது.

சிறிலங்கா மக்களே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இன்னும் சில மாதங்களில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். மக்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. எந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் பணியாற்ற தயாராக உள்ளது.

சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறோம், பெரும்பாலும் யுஎஸ் எய்ட் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி உதவி வழங்கும் நிறுவனமாகும்.

மிலேனியம் சவால் நிறுவனம் மற்றொரு உதவி வழங்குநராகும்.

எமது திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலானவை. பால்பண்ணைத் தொழிலின் விருத்திக்கு ஆதரவு அளிப்பது தொடக்கம், அமெரிக்கன் கோணர்களில் ஆங்கில வகுப்புகளை நடத்துவது வரை, பல உதவி முயற்சிகளை உள்ளடக்கியது.

அமெரிக்க படையினர் சிறிலங்காவில் குற்றமிழைக்கும் போது, இங்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்ற கரிசனையை எழுப்பியதற்கு நன்றி. கடினமான மற்றும் சோகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

வருகைப் படைகள் அல்லது சோபா  போன்ற ஒரு உடன்பாட்டைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்கூட்டியே ஏற்றுக் கொள்வது தான்.

பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டிய உடன்பாடுகள் உள்ளன.

உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா படையினர்  குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, சிறிலங்கா சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.

சிறிலங்காவின் பன்முகத்தன்மையையும், நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கிறது. அந்த மதிப்பு எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் இதயத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த வலுவான இறைமையுள்ள பங்காளராகவே சிறிலங்கா இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு எவ்பிஐ அமைப்பின் ஆதரவை வழங்கினோம்.

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு இன்னும் பல வழிகளைத் தேடுவோம்.

எல்லா நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு புதிய வகையான பயங்கரவாதம் சிறிலங்காவில் உள்ளது.

நீண்டகால ஒத்துழைப்பு மற்றும்  ஜனநாயகத்தைப் பின்பற்றுவதன் ஊடாக, வலுவான ஒத்துழைப்புகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சுதந்திரங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

பொருளாதார ரீதியில், சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது.  ஆண்டுதோறும் சிறிலங்கா ஏற்றுமதி செய்யும் 11.7 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பொருட்கள் அமெரிக்க சந்தைகளுக்கே அனுப்பப்படுகின்றன.

சிறிலங்காவில் இருந்து அமெரிக்கா பெரும்பாலும் ஆடைகளைளே இறக்குமதி செய்கிறது. இறப்பர், தொழில்துறை பொருட்கள், இரத்தினக் கற்கள், தேயிலை மற்றும் வாசனைத்ப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சிறிலங்காவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் விலங்கு தீவனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோயா பீன்ஸ், பிளாஸ்டிக், பால் பொருட்கள், கோதுமை, துணி மற்றும் ஆடைகள் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *