மேலும்

வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை

வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்கா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

”சீனா, சிறிலங்கா போன்ற நாடுகள், மேற்கத்திய சக்திகளின், ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை.

எனவே, வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இத்தகைய தலையீடுகள், சிக்கல்கள், குழப்பங்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர, ஒருபோதும் நன்மைகளைத் தர முடியாது.

சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது, அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கிறது.

நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும், வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும், சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வெளிச்சக்திகள், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது என்ற போர்வையில், மற்ற நாடுகளை எப்போதும் கொடுமைப்படுத்துவதுடன்,  மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றன.

காலனித்துவ காலங்களில், அவர்கள் ஏனைய நாடுகளின் செல்வத்தை சுரண்டினர், மக்களை அடிமைப்படுத்தினர்.

புதிய யுகத்தில், பழைய மனநிலையுடன், மற்றவர்களின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *