மேலும்

பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா?

21/4 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

முதலாவது, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று, கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, பாதுகாப்பு அமைச்சின் கீழ், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம்,  மற்றும் சர்வதேச, உள்நாட்டு தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டம் என்ற பெயரில், சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

21/4 தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த இரண்டு அமைப்புகளும் நிறுவப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசனைச் சபை கடந்தவாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு, அதன் முதலாவது கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள தேசிய பாதுகாப்புச் சபைக்கு அப்பால், இந்த ஆலோசனைச் சபை உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதியே தலைமை தாங்குவார். அவர் இல்லாத போது, பிரதமர் தலைமை தாங்குவது வழக்கம். ஆனால் 21/ 4 தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்ட பிரதமரால் முடியாத நிலை ஏற்பட்டது.

அதைவிட பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு கடந்த ஒக்ரோபருக்குப் பின்னர் பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் மாத்திரமன்றி பொலிஸ்மா அதிபரும் கூட அழைக்கப்படவில்லை.

அதற்குப் புறம்பாக, பாதுகாப்பு சபை, பாதுகாப்புக் குழு என்ற பெயரில், பாதுகாப்பு விவகாரங்களை பற்றி ஆராயும், முடிவுகளை எடுக்கும் வகையிலான பல்வேறு கூட்டங்களை ஜனாதிபதி கூட்டியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்பாக சாட்சியம் அளித்த போது, இதுபற்றி கூறியிருந்தார்.

அதுமாத்திரமன்றி, 21/4 தாக்குதல்களின் பின்னர், ஜனாபதிபதி கூட்டிய தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட பங்கேற்றிருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது, தேசிய பாதுகாப்புச் சபைக்கு புறம்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். சுதந்திரமான அமைப்பாக செயற்படும் இந்த ஆலோசனைக் குழு, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து, ஜனாதிபதிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கவுள்ளது.

இந்தக் குழுவில், சட்டத்தரணிகள் காலிங்க இந்திரதிஸ்ஸ, நிஜெட் ஹட்ச்,  சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்புச் சபையை வாரம் தோறும் கூட்டி, பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்திருந்தால்- உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், 21/ 4 தாக்குதல்களை தடுத்திருக்கவோ அல்லது பாதிப்புகளை குறைத்திருக்கவோ முடியும்.

இந்த நிலையில், பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் போன்றவர்கள் இடம்பெற்றுள்ள, தேசிய பாதுகாப்புச் சபைக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலேயே, தேசிய பாதுகாப்பு ஆலோசனைச் சபையை ஜனாதிபதி அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஏற்கனவே பாதுகாப்பு குழு கூட்டம் என்று தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களை ஜனாதிபதி நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை எவ்வாறு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளவுள்ளது என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் கீழ், புதிய புலனாய்வு மற்றும் முறியடிப்பு பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம்,  மற்றும் சர்வதேச, உள்நாட்டு தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள இந்த சிறப்புப் பிரிவுக்கு, யாழ்.படைகளின் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி இவர் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இந்த புதிய பிரிவை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரியவருகிறது. இந்த வர்த்தமானியில் தான், இந்த புதிய அமைப்பின் அதிகாரங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படும்.

இந்த புதிய பிரிவு மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம்,  மற்றும் சர்வதேச, உள்நாட்டு தீவிரவாதம் தொடர்பான தகவல்களைத் திரட்டி, முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதில், விமானப்படை, கடற்படை, இராணுவம் ஆகிய முப்படைகளையும் சேர்ந்த 100இற்கும் அதிகமான சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள்,  தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் எதிர் நடவடிக்கைகளை எடுப்பதிலும் கவனம் செலுத்தவுள்ளனர்.

21/4 தாக்குதல்கள் தொடர்பான தகவல் முன்கூட்டியே கிடைத்திருந்தும், அதனை உரிய வகையில் கையாளுவதற்கோ, தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ சரியான கட்டமைப்பு ஒன்று இருக்கவில்லை.

அரச, இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி இருந்தன. ஒருங்கிணைந்த செயற்பாடின்றி இயங்கியிருந்தன.

இந்தியா போன்ற நாடுகளில் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் வாரம் தோறும் கூடி ஆராயும் வழக்கமும், அதற்கான கட்டமைப்புகளும் உள்ளன.

அவ்வாறான ஒரு கட்டமைப்பு இல்லாமல் போனதாலேயே, 21/4 தாக்குதல்களை தடுப்பதற்கான வழி தெரியாமல் போனது. இந்தியா வழங்கிய எச்சரிக்கையை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தரப்புகள் உதாசீனம் செய்தன.

அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு இதுவரை எந்தளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டு, புலனாய்வுக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தார். இராணுவத் தளபதியும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும், அரச மற்றும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனினும், இப்போது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய பிரிவு, அவ்வாறான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான கட்டமைப்பாக இருக்குமா என்பது, அதன் அதிகாரங்கள், செயற்பாட்டு வரையறைகளைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியான பின்னரே தெரியவரும்.

எவ்வாறாயினும், அரச புலனாய்வுப் பிரிவுகளுடனான ஒருங்கிணைப்புகள் இல்லாவிடினும், புதிய பிரிவின் மூலம், முப்படைகளினதும் புலனாய்வுப் பிரிவுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

புதிய பணியகத்துக்கு முப்படைகளின் அதிகாரிகள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் புலனாய்வு தகவல்களை திரட்டுவதை விட, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவர் என்று தெரிகிறது.

புலனாய்வு தகவல்களை பெற்றுக் கொள்வதை விட, பகுப்பாய்வு செய்வது முக்கியமானது. அவ்வாறான பகுப்பாய்வு தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும், மதிப்பீடுகளை செய்வதற்கும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கும் உதவும்.

21/4 தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா புலனாய்வுத் தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த போது, அதனைப் பகுப்பாய்வு செய்யும் கட்டமைப்பு இருக்கவில்லை.

அவ்வாறான கட்டமைப்பு ஒன்று இருந்திருந்தால், அது, அந்த புலனாய்வு தகவலின் மூலம், நம்பகத்தன்மை என்பனவற்றை ஆராய்ந்திருக்கும். அதனை அடிப்படையாக வைத்து, மேலதிக தகவல்களை திரட்ட முனைந்திருக்கும். தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்திருக்கும்.

பகுப்பாய்வு அலகு ஒன்று இல்லாததால் தான், இந்தியாவின் புலனாய்வுத் தகவலைப் பயன்படுத்திக் கூட தாக்குதல்களை தடுக்க முடியாமல் இருந்தது இலங்கை.

இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உருவாக்கப்படும் புதிய பிரிவு அவ்வாறான பகுப்பாய்வு குறைபாட்டை போக்கும் என்றே தெரிகிறது,

ஏனென்றால் இந்த புதிய பிரிவு, புலனாய்வு தகவல்களை தேடிச் செல்வதை விட, பகுப்பாய்வுகளில் அதிக கவனம் செலுத்தி, அழிவுகள், ஆபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தப் புதிய பிரிவுகளின் மூலம், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை உடனடியாக கூறமுடியாது.

மத தீவிரவாதம், மத வன்முறை போக்கு என்பன கூர்மையடையத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கைத் தீவின் புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு திறன்களை வலுப்படுத்திக் கொள்வது பாதுகாப்பானதே.

ஆனாலும், அதற்குத் தேவையானளவு ஆற்றலுடன் இந்த பிரிவுகள் அமைக்கப்படுகிறதா என்பதை அது உருவாக்கப்படும் விதத்தைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடியும்.

-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *