மேலும்

உடன்பாட்டுக்கு வந்தால் தான் அமெரிக்காவுடன் சோபாவில் கையெழுத்து – ரணில்

சிறிலங்காவின் கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அனுரகுமார திசநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

ஊடகங்களில் கூறப்படுவதைப் போன்று தற்போது சோபா உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுக்கும், சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களைத் தவிர,  அமெரிக்காவுடன் எந்தவொரு சோபா உடன்பாட்டிலும் அரசாங்கம் கையெழுத்திடவில்லை.

சில ஊடகங்கள் 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக தவறாக வழிநடத்துகின்றன. அவ்வாறு 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது. போலியானதாகும்.

அத்தகைய ஆவணம் இருந்தால், அதன் பிரதியை என்னிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து காவல்துறையை விசாரிக்க நான் கோருவேன்.

அமெரிக்க அரசு பல முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது, ஆனால் அவற்றுக்கு  அரசாங்கம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, அந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.

சிறிலங்காவில் அமெரிக்கா இராணுவ முகாம்களை அமைப்பது குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை.  அமெரிக்காவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை கருத்தில் கொள்ளும்போது,  இங்குபு தளம் அமைப்பது சாத்தியமில்லை.

விமானம் தாங்கி கப்பலான ‘றொனால்ட் றீகன்’ 90 விமானங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. அவ்வாறு 90 விமானங்களை கையாளக் கூடிய இடம் இலங்கையில் இல்லை.

தவிர படைகள் நவீன உலங்குவானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் போர்த்துகீசியர்கள் குழுக்களை சிறிலங்காவுக்கு கொண்டு வந்ததைப் போல அவர்கள் துருப்புக்களைக் கொண்டு வரவில்லை.

ஜப்பான், தென்கொரியா மற்றும் டியேகோ கார்சியா ஆகிய இடங்களில் ஏற்கனவே தளங்களைக் கொண்டிருப்பதால், சிறிலங்காவில் தளம் அமைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை.

புதிதாக முன்மொழியப்பட்ட அக்சா உடன்பாட்டு வரைவில்,  அமெரிக்கா தொடர்பு புள்ளிகளை அதிகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இதுபற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது, சிறிலங்காவுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுடன் தான் அமெரிக்கா இதுபற்றி இணங்க வேண்டும்.

அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள சோபா உடன்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

1995 இல் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு, பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு அல்ல. ஆனால் அது, பொதுவாக அமெரிக்க இராணுவத்தினர், வெளிநாட்டு ஒன்றில் செயற்படும் கட்டமைப்பை நிறுவும் வகையிலானது.

வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்குச் சென்றது அமெரிக்க அரசாங்கத்துடன் சோபா உடன்பாடு குறித்து பேசுவதற்காக அல்ல.

இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து உடன்பாடுகள் குறித்தும் விவாதிக்கவே அவர் அங்கு சென்றிருந்தார். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், வழக்கமான செயல்முறையாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்பாட்டின் கீழ், சிறிலங்காவில் பணியாற்றும் அமெரிக்கப் படையினரும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிவில் பணியாளர்களும் இராஜதந்திர சலுகைகளை அனுபவிக்கிறார்கள் .

திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும்,  இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

எனவே, அமெரிக்காவுக்கோ, சீனாவுக்கோ, பிரித்தானியாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ, துறைமுகங்கள் கிடையாது, ஆனால், அவர்கள் வந்து போகலாம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *